கன்னியாகுமரி: பணியிடங்களில் பாலியல் புகார் தெரிவிக்க புகார் பெட்டிகள்

By எல்.மோகன்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக புகார் பெட்டிகளை நிறுவனங்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில், "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தின் கீழ், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு, தீர்வு மற்றும் நிவர்த்தி துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நடைபெற்றது.

‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (தடுப்பு, தீர்வு மற்றும் நிவர்த்தி) சட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் நிறுவனங்களில் உள்ளகக் குழு கட்டாயம் அமைக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களும் உள்ளகக் குழு உறுப்பினர்களின் விவரங்களை அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அந்நிறுவனத்தின் கடமை என்று உணர்ந்து, மோசமான செயல்களில் ஈடுபடும் நபரை உடனடியாக அந்நிறுவனத்திலிருந்து அகற்றி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், 181 மகளிர் உதவி எண் மற்றும் இணையதள முகவரி https://shebox.nic.in மூலம் அதிகளவில் பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் ரீதியான வன்கொடுமை நடைபெறும் பட்சத்தில் அவர் நிரந்தர பணியாளராகவோ, தற்காலிக பணியாளராகவோ இருந்தாலோ எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் உள்ளகக் குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக அனைத்து நிறுவனங்களிலும் புகார் பெட்டி அமைக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் புகார் பெட்டி மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது. புகார் பெட்டிகள் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களின் பார்வையில் இல்லாத இடத்தில் பொருத்தப்பட வேண்டும் எனவும், பெறப்படும் புகார் மனுக்களின் விவரங்களை உள்ளகக் குழுக்கள் ரகசியமாக பாதுகாக்க வேண்டும் எனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கெனவே பல நிறுவனங்களில் உள்ளகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அமைக்கப் படாத நிறுவனங்கள் உடனடியாக அமைத்து உறுப்பினர்கள் விவரங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒருவார காலத்திற்குள் சமரப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகிலா பானு, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மேரி டயனா ஜெயந்தி, மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிப்பதற்கான புகார் பெட்டிகளை நிறுவனங்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE