தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதயாத்திரை பக்தர்களுக்கான ஓய்விட பூங்கா, மகளிருக்கான பிரத்யேக பிங்க் பூங்கா மற்றும் பசுமை பூங்கா உள்ளிட்ட ரூ.9.91 கோடி மதிப்பிலான திட்டங்களை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மேலூரில் நமக்கு நாமே திட்டத்தில் என்எல்சி - தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் (என்டிபிஎல்) சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதி ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம், சிவந்தாகுளத்தில் மாவட்ட கனிமவள நிதித்திட்டம் மற்றும் மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடம், தமிழ்ச் சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மகளிருக்கான பிங்க் பூங்கா,
மாசிலாமணிபுரத்தில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, திருச்செந்தூர் ரவுண்டானா அருகில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நடைபயண பக்தர்கள் ஓய்விடப் பூங்கா, கிரேஸ் நகரில் தேசிய தூய்மை காற்றுத்திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பசுமைப் பூங்கா ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (அக்.25) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார்.
தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வரவேற்றார். தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மகளிர் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பெண்களுக்கு ஆரி ஒர்க், எம்ராய்டிங், சிறுதானிய உணவு வகைகள் தயாரித்தல், ஓவியப் பயிற்சி, விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்தல், நகை தயாரிப்பு, அழகு கலைப் பயிற்சி, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற பயிற்சிகள் தூத்துக்குடி திருச்சிலுவை மனையியல் கல்லூரி சார்பில் அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாநகராட்சி மற்றும் திருச் சிலுவை மனையியல் கல்லூரி இடையை புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, அதன் நகலை மேயர் ஜெகன் பெரியசாமி, கல்லூரி முதல்வர் அருட் சகோதரி ரூபா ஆகியோர் பரிமாறிக் கொண்டனர். மேலும், இந்த பூங்கா தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் செயல்படும். இப்பூங்காவில் பணியாளர்கள், உடற்பயிற்சிக் கூட பயிற்சியாளர் உள்ளிட்ட அனைவரும் பெண்களே இருப்பர். இதேபோல் மேலும் ஒரு மகளிர் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நடைபயண பக்தர்கள் ஓய்விட பூங்காவில், திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வகையில் ஓய்வுக்கூடம், கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், துணை மேயர் ஜெனிட்டா, என்டிபிஎல் முதன்னை செயல் அதிகாரி அனந்த ராமானுஜம் மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர்கள், அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.