காஞ்சிபுரம்: திருப்புலிவனம் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் சிப்காட் அமைக்க விவசாயிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதிகளில் சிப்காட் அமைக்கிறோம் என்ற பெயரில் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (அக்டோபர் 25-ம் தேதி) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் திருப்புலிவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் சிப்காட் அமைப்பதற்காக நிலம் அளவிடும் பணி நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பலர் பேசினர்.
தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் பேசிய மரம் மாசிலாமணி, ''பனை விதைகள் நடுவதை அதிகப்படுத்த வேண்டும். காடுகள் விகிதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைவாக உள்ளது. அதனை அதிகப்படுத்த வேண்டும்” என்றார். விவசாயி அரும்புலியூர் மோகன் பேசும்போது, ''திருமுக்கூடல் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வு அதிகம் உள்ளது. அதனை இப்போதே ஆய்வு செய்ய வேண்டும்'' என்றார்.
வேளாண்மைக்கு தேவையான விதைகள் கூடுதலாக வழங்க வேண்டும், ஏரி, குளங்களை தூர்வார வேண்டும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்றனர்.
இராஜகுளம் வையாவூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 25 விவசாயப் பயனாளிகளுக்கு ரூ.22,59,266 மதிப்பீட்டில் பயிர்க் கடன்களும், விப்பேடு கூட்டுறவு சங்கத்தின் மூலம் 5 விவசாயப் பயனாளிகளுக்கு ரூ.1,80,000 மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன்களும், வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் 7 விவசாய பயனாளிகளுக்கு ரூ.3,020 மதிப்பிலான தூயமல்லி - பாரம்பரிய நெல் விதை, உளுந்து விதை, நுண்ணூட்டக் கலவை – நெல், வேப்பங்கன்றுகள் விநியோகம், ஆடுதொடா, நொச்சி மரக்கன்றுகள் போன்ற வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரா.ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.