தாம்பரம் அருகே பாலத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

By கோ.கார்த்திக்

தாம்பரம்: தாம்பரம் அருகே தர்கா சாலையில் சேதமடைந்த சிறு பாலத்தை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் இன்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாம்பரம் அருகே தர்கா சாலையில், நெடுஞ்சாலைத் துறையினரின் சாலை விரிவாக்க பணியின் காரணமாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்த சிறு மேம்பாலம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சிறு மேம்பாலத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் 65 நாட்கள் கடந்த பின்பும் இதுவரை பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதனால், நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் இன்று திடீரென, முக்கிய சாலையான தாம்பரம், தர்கா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், காலை நேரத்தில் பணிக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதனிடையே, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸ் சமாதானத்தை ஏற்காக பொதுமக்கள், நெடுஞ்சாலைத் துறையினர் வந்து உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு சொன்னால் மட்டுமே மறியலைக் கைவிடுவோம் என பிடிவாதம் காட்டினர்.

அதே சமயம் அவர்கள், “வாகன ஓட்டிகளை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்தப் பாலத்தை சீரமைக்க நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் செவி சாய்க்காமல் மெத்தனமாக நடந்து கொள்கிறார்கள்” என குற்றம் சாட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE