அவிநாசி அருகே மூன்றரை அடியில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு மீட்பு

By இரா.கார்த்திகேயன்

அவிநாசி: அவிநாசி அருகே மூன்றரை அடியில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது. அதை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அப்பகுதியில் உள்ள குளத்தில் விடுவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து காசிக்கவுண்டன்புதூர் பல்லாங்காடு பகுதியில் வசிப்பவர் முருகன் (36). கட்டிடத் தொழிலாளியான இவர் வழக்கம் போல் நேற்று மாலை (அக். 24) வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புதுப்பாளையம் - அவிநாசி சாலையில் நாய்கள் கூட்டமாக ஓரிடத்தைப் பார்த்து குரைப்பதை பார்த்த முருகன் அருகில் சென்று பார்த்துள்ளார்.

அங்கே மூன்றரை அடி நீளமுள்ள அரிய வகை மண்ணுளிப் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்துள்ளது.
இதையடுத்து, நாய்களிடமிருந்து மண்ணுளிப் பாம்பை மீட்ட முருகன், அருகில் இருந்த வீட்டினரின் உதவியோடு பக்கெட்டில் பாம்பை பிடித்து வைத்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

உடனே அங்கு வந்த வனவர் சங்கீதா மற்றும் வனக் காவலர் வெங்கடேசன் ஆகியோர் மண்ணுளிப் பாம்பை புதுப்பாளையம் குளத்து பகுதியில் பத்திரமாக விட்டனர். விவசாயிகளின் உற்ற நண்பனாக விளங்கும் அழிந்து வரும் பட்டியலில் உள்ள மண்ணுளிப் பாம்பை நாய்களிடமிருந்து மீட்டு பத்திரமாக தங்களிடம் ஒப்படைத்த முருகனை வனத்துறையினர் பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE