ராணிப்பேட்டை | மழை வெள்ள பாதிப்பின்போது நெற்பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

By KU BUREAU

ராணிப்பேட்டை: வடகிழக்கு பருவமழையையொட்டி விவசாயிகளுக்கு நெற் பயிர்களை பாதுகாப்பு குறித்து வாலாஜா வட்டார உதவி இயக்குநர் திலகவதி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும் பருவமழையையொட்டி கடந்த சில நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை மையம் அறிவித்திருந்தது. பெருமழையின் தாக்கத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் தப்பியது என்று கூறலாம். இருப்பினும், மாவட்டம் நிர்வாகம் வடகிழக்கு பருவமழையையொட்டி பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்களை பாதுகாக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா வட்டாரத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து இதுவரை 145 மி.மீ., மழைபதிவானது. இதன் காரணமாக வாலாஜா வட்டாரத்தில் மழை காரணமாகவும், காலநிலை மாற்றத்தினால் நெற்பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அதனை எதிர்கொள்ளும் வகையில் வாலாஜா வட்டார விவசாயிகளுக்கு, வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘நெற்பயிர் நீரில் மூழ்கிய நிலையில், போரான், இரும்பு, மாங்கனீசு, மணிச்சத்து, தழைச்சத்து, சாம்பல்சத்து ஆகியவைகளில் கரைதிறன் அதிகமாகி விரையமாகும். தண்ணீர் தேங்கிய நிலையில் பிராண வாயு கிடைக்காமல் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படும். பிராணவாயு கிடைக்காததால் இதனை சார்ந்த நுண்ணுயிரிகளின் செயல் நின்றுவிடும் அல்லது குறைந்துவிடும்.

நீர்வயலில் தேங்குவதாலும், தொடர் மழையினாலும் மேக மூட்டமான பருவத்திலும் மண் மற்றும் காற்று மண்டலத்தின் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்படுகிறது. குளிர்ச்சியான தட்பவெப்பத்தில் பயிர்கள் மண்ணிலிருந்து சத்துக்களை எடுத்துக் கொள்ளும் திறன் குறைகிறது. இதனால், பயிரின் வளர்ச்சி தடைபடுகின்றது. முக்கியமாக இவ்வித குறைந்த வெப்ப நிலையில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, துத்தநாகச்சத்து மற்றும் தாமிரச்சத்து ஆகியவை பயிரினால் மண்ணிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

குளிர்ச்சியான தட்பவெப்பத்தில் பயிரினால் எடுத்துக்கொள்ளப்பட்ட நைட்ரேட் மற்றும் அமோனியா, தழைச்சத்து வடிவங்களில் பயிருக்குள் உடனே உரிய பொருளாக உருமாற்றங்கள் அடைவதில்லை. இதனை விரைவுபடுத்த நுண்ணூட்டங்கள் உதவி புரிவதால் இவற்றை இலையின் மேல் தெளிக்க வேண்டும்.அங்ககப் பொருட்கள் சத்துக்களாக உருமாற்றமாவது இந்த சூழ்நிலையில் பாதிக்கப்படுவதால் பயிருக்கு கந்தகச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பயிரின் தோகைகள் மஞ்சளாக மாறும்.

மண்ணில் இரும்புச் சத்து அதிகமாகி மாங்கனீசு சத்து குறைந்து இலை களின் விகிதாச்சாரம் பாதிக்கப்பட்டு அதிக அளவினால் பாதிப்பு பயிருக்கு ஏற்படும். மாங்கனீசு பற்றாக்குறையால் இலைப்புள்ளி நோய்கள் உண்டாகும். அதிக தழைச்சத்து, சுண்ணாம்புச்சத்து மற்றும் போரான் பற்றாக்குறை ஏற்படும். நுனி இலைகள் கருகுதலும், வெடிப்பும் ஏற்படும்.

மேற்கண்ட பிரச்சினைகளை சமாளிக்க, கூடுதல் நீரை வடிகட்டி, வளர்ச்சி பருவத்தில் உள்ள நெற் பயிருக்கு, 1 சதவீதம் யூரியா கரைசல் (ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 1 கிலோ சிங்க் சல்பேட், 200 லிட்டர் தண்ணீர்) தெளிக்க வேண்டும்.

பூக்கும் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தின் போது, 2 சதவீதம் கரைசல் தெளித்து, ஏக்கருக்கு 50 கிலோ அம்மோனியம் சல்பேட் அல்லது 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ பொட்டாஷ் கலந்து மேல் உரமாக இட வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் நுண்ணுயிரினை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பயிரினை பாதுகாக்க வேண்டும்" என விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE