ஓசூர் | தளி அருகே கரும்பு தோட்டங்களில் மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் வேதனை

By KU BUREAU

ஓசூர்: தளி அருகே ராஜகால்வாய் தூர்வாரப்படாததால், கரும்பு தோட்டங்களில் மழை நீர் சூழ்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த மாருப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏரி நிரம்பி ராஜகால்வாயில் தண்ணீர் வெளியேறியது. ஆனால் ராஜகால்வாயில் ஆக்கிரமிப்பால் கால்வாய் உடைந்து அருகே உள்ள கரும்பு தோட்டங்களில் சுமார் 3 அடி உயரம் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி கூறும் போது, மாருப்பள்ளி கிராமத்தில் சுமார் 10 ஏக்கரில் செங்கரும்பை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு ஏரி நிரம்பி ராஜகால்வாய் மூலம் தண்ணீர் செல்ல வழியில்லாமல் கால்வாய் உடைந்து கரும்பு தோட்டங்களில் சூழ்ந்துள்ளது.

தோட்டங்களில் தண்ணீர் தேங்குவதால் கரும்பு செடியில் பூக்கள் பூத்து அறுவடைக்கு முன்னரே விளைச்சலுக்கு வந்து வேருடன் சாய்ந்து விடும். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

மழை நீர் விளை நிலங்களில் தேங்கி நிற்காமல் இருக்க தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE