நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கன மழை: உதகை சாலைகளில் தேங்கிய வெள்ளம் - பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் அவதி

By KU BUREAU

உதகை: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக, உதகை நகர் பகுதிகளிலுள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் வரும் 27-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, உதகை, கோத்தகிரி உட்பட பல்வேறு இடங்களில் நேற்று மதியம் ஒரு மணி முதல் மாலை 3 மணி வரை கன மழை பெய்தது.

குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. உதகையில் சவுத்வீக் பகுதியில் இருந்து வந்த மழைநீர், சேரிங்கிராஸ் பகுதியில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு சில வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்றன.

அதேபோல், பேருந்து நிலையம் அருகே ரயில்வே பாலம் உட்பட பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், பல்வேறு ஊர்களுக்கு செல்ல இருந்தவர்களும், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகினர். கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் பெய்த மழையால், விவசாயத் தோட்டங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது.

உதகையில் நேற்று 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 86 சதவீதமாக இருந்தது. இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் இன்றும் (அக்.25) மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி கோத்தகிரியில் 18, கோடநாட்டில் 17, கீழ் கோத்தகிரியில் 15, உதகையில் 5.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE