கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் தண்டவாள விரிசலால் ரயில் சேவை பாதிப்பு

By KU BUREAU

சென்னை: சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கத்தில், முக்கியமான வழித்தடமாக, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் தடம் உள்ளது. இத்தடத்தில் நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுன்றன. இந்த ரயில்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அனுப்பம்பட்டு - மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பாளர் நேற்று முற்பகல் 11.30 மணிக்கு சோதனை மேற்கொண்டார். அப்போது, இரண்டு ரயில் நிலைங்களுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட இடத்தில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் ரயில்வே அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் அடிப்படையில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஒரு மின்சார ரயில், 2 விரைவு ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன. இதுதவிர, சில விரைவு ரயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன. இதையடுத்து, ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி விரிசலை சரிசெய்தனர். இதையடுத்து, ரயில் சேவை நேற்று நண்பகல் 12.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

பயணிகள் அவதி: இதற்கிடையில், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக, மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு, சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டு, ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. மின்சார ரயில் சேவை 2 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE