நாமக்கல் கவிஞர் மாளிகையில் ‘ஏர் கிராக்’ காரணமாக சிதறிய ‘டைல்ஸ்’ - பணியாளர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு

By KU BUREAU

சென்னை: தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகை முதல் தளத்தில் தரையில் பதிக்கப்பட்டிருந்த தரை ஓடுகள் (டைல்ஸ்) வெடித்து சிதறிய நிலையில், பணியாளர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு வெளியில் ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் 10 தளங்களை கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடம், 2012-ம் ஆண்டு பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது. அரசுத் துறைகளின் செயலர்கள், கூடுதல் செயலர்கள், துணை செயலர்கள் மற்றும் துறைகளின் அலுவலகங்கள் இக்கட்டிடத்தில் செயல்படுகின்றன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் இந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் மருந்தகம், வங்கி போன்றவையும் செயல்படுகின்றன.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் இக்கட்டிடத்தில் அலுவலர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். காலை 10.45 மணியளவில் கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டதாகக் கூறி, அனைத்து ஊழியர்களும், அலறியடித்து வெளியே ஓடி வந்தது கூடி நின்றனர். இதனால், தலைமைச் செயலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல் துறையினர், பொதுப்பணித் துறையினர் வந்து ஆய்வு செய்ததில், கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள வேளாண் துறை பிரிவு அலுவலகத்தில் அலுவலர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு நடுவில் உள்ள பாதையில், ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் கற்களில் திடீரென விரிசல் ஏற்பட்டு சிதறியதும் அதனால் பெரிய அளவில் சத்தம் வந்ததும் தெரிய வந்தது.

தகவலறிந்து வந்த வேளாண் துறை செயலர் அபூர்வா பார்வையிட்டு, அலுவலர்களை உடனடியாக இருக்கைக்கு செல்லும்படி உத்தரவிட்டதுடன், மீண்டும் வருகையை பதிவு செய்யவும் அறிவுறுத்தினார். அதன்பின், அனைவரும் பணிக்கு திரும்பினர். இதற்கிடையில், அலுவலர்கள் உடைந்த டைல்ஸ் பாகங்களை அப்புறப்படுத்தினர். மேலும், நாமக்கல் கவிஞர் மாளிகையின் வெளியில் நின்றிருந்தவர்களிடம், காவல் துறையினர் வாகன ஒலிபெருக்கி மூலம் தகவலைத் தெரிவித்து, அலுவலகம் செல்ல அறிவுறுத்தினர்.

இந்நிலையில் அங்கு வந்த தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன், ``தலைமைச் செயலக கட்டிடம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை பழமையானது என்பதால், தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மட்டும்தான் தீ பாதுகாப்பு சான்றிதழ் உள்ளது. தலைமைச் செயலக கட்டிடத்துக்கு இல்லை.

இதை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். தற்போது நடைபெற்ற சம்பவத்தால் கட்டிடம் உறுதியாக இல்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர். கட்டிடம் 100 சதவீதம் உறுதியாக உள்ளதா என்பதை பொதுப்பணித் துறை ஆய்வு செய்ய வேண்டும்'' என்றார்.

இதற்கிடையில், நிகழ்வை அறிந்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அங்கு வந்து ஆய்வு செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``முதல் தளத்தில் பதிக்கப்பட்ட டைல்ஸ்களில் ஏற்பட்ட விரிசலால் சப்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தேன். நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது. 2 நாட்களில் அப்பகுதியில் புதிய டைல்ஸ் பொருத்தப்படும்'' என்றார்.

பொதுத்துறை விளக்கம்: பொதுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நாமக்கல் கவிஞர் மாளிகை முதல் தளத்தில் உள்ள வேளாண் துறை சார்ந்த பிரிவுகள் செயல்பட்டு வரும் அறையில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட ஓடுகள் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக, உள்ளிருக்கும் காற்று விரிவடைந்ததால் பெயர்ந்தது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர், பொறியாளர்கள் ஆய்வு செய்ததில் கட்டிடத்தின் தரை ஓடுகளின்கீழ் உள்ள கான்கிரீட் பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் உறுதித் தன்மையுடன் இருப்பதும் தெரியவந்துள்ளது. சேதமடைந்த ஓடுகளை அகற்றிவிட்டு புதிய ஓடுகள் பதிக்கும் பணி நடைபெற உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE