திருச்செந்தூர் கோயிலில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு: அறநிலையத் துறை பதில் அளிக்க உத்தரவு

By KU BUREAU

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, அறநிலையத் துறை பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த பா.ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது தினமும் 1.5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். சூரசம்ஹாரத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்பர். இக்கோயிலில் தினமும் 15,000 முதல் 16,000 பக்தர்கள் வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். சாதாரண நாட்களில் கட்டணமில்லா தரிசனம் மற்றும் ரூ.100 கட்டணத்தில் விரைவு தரிசனம் நடைபெறும். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில், விரைவு தரிசனத்துக்கு ரூ.200 வசூலிக்கப்படும்.

இந்நிலையில், 2018-ல் கந்த சஷ்டியின்போது விரைவு தரிசனத்துக்கு ஒருவருக்கு ரூ.1,000, விஸ்வரூப தரிசனத்துக்கு ரூ.2,000, அபிஷேக தரிசனத்துக்கு ரூ.3,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. எனினும், 2022 வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை. இதற்கிடையே, கோயில் அலுவலக சுவரில் ஆணையர் மற்றும் தக்கார் பெயரில் 18.9.2024-ல் ஒட்டப்பட்ட அறிவிப்பில், கந்தசஷ்டியின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவு தரிசனத்துக்கு ரூ.1,000 கட்டணம் வசூலிக்க உள்ளதாகவும், அதுதொடர்பாக ஆட்சேபம் இருந்தால் அக்.3-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயிப்பது தவறு.

எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதித்து, கட்டண உயர்வு தொடர்பான 2018-ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, திருப்பதியில் இருப்பது போல விஸ்வரூப தரிசனம், அபிஷேக தரிசனம், கட்டணமில்லாத தரிசனம், விரைவு தரிசனங்களுக்கு ஆதார் எண் அடிப்படையில் தரிசன நேரம் குறிப்பிட்டு, பக்தர்களுக்கு முன்கூட்டியே அனுமதி டோக்கன் அளிக்கவும், கோயில் வளாகத்தில் தரிசன டோக்கன் அளிக்க குறைந்தது 5 இடங்களிலாவது தனி கவுன்ட்டர்கள் திறக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "சுவாமி தரிசனத்துக்கு ரூ.1,000, ரூ.2,000 என கட்டணம் வாங்கினால், ஏழை மக்களால் எவ்வாறு தரிசனம் செய்ய முடியும். ஏழைகள் சுவாமி தரிசனம் செய்யக் கூடாதா? செல்வந்தர்களுக்கு மட்டும்தான் கோயிலா?" என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், "மனு தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE