தஞ்சாவூரில் தீபாவளிக்காக தற்காலிக கடைக்காரர்களிடம் ஆளும் கட்சியினர் வசூல்: சாலை மறியலால் பரபரப்பு 

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: தீபாவளியையொட்டி தஞ்சாவூரில் தற்காலிக கடைகளைப் போட்டவர்கள் 2 இடங்களில் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகையின் போது தஞ்சாவூர் காந்திஜி சாலை, கீழவாசல் சாலை மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில், வெளி மாநில, வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வார்கள். அதுபோல இந்தாண்டும் 3 இடங்களிலும் சாலையின் இருபுறங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், கடைகளுக்கு ஏற்ப தொகையை வசீலித்துக் கொண்டு தற்காலிக கடைகளை அமைக்க இடங்களை ஒதுக்கியுள்ளனர். அப்படி ஒரு கடைக்கு தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, அந்தக் கடைகளை அகற்ற வேண்டும் என நேற்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நேற்று நள்ளிரவு முதல், 3 இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான கடைகளை அகற்றி வரும் நிலையில், ஆளும் கட்சியினரிடம் பணம் கொடுத்து கடை போட்டவர்கள், பணத்தைத் திரும்பப் பெற அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர்கள் இன்று காலை காந்திஜி சாலையில் இந்து பாரத பேரவை மாநில நிர்வாகி ஆர்.ஆனந்தன் தலைமையில், அரசுப் பேருந்தை மறித்து தாங்கள் வழங்கிய தொகை திரும்ப வழங்க வேண்டும் அல்லது வியாபாரம் செய்யக் கடைகளை ஒதுக்கித் தரவேண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த டிஎஸ்பி-யான சோமசுந்தரம் மற்றும் போலீஸார், அவர்களில் சிலரைத் தாக்கி குண்டுக்கட்டாக, பேருந்தில் ஏற்றி சிறிது தூரம் அழைத்துச் சென்று கீழே இறக்கி விட்டனர்.

இதேபோல் அண்ணா சிலை அருகில் கீழவாசல் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைக்காரர்களும் ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. சந்திரகுமார், மாவட்டச் செயலாளர் துரை. மதிவாணன் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த டிஎஸ்பி-யான சோமசுந்தரம், அவர்களை, அங்கிருந்து விரட்டியதுடன், ''பணம் கொடுத்தவர்களிடம் போய் கேட்க வேண்டும், சாலையை மறிக்கக்கூடாது. மீறினால் கைது செய்து சிறையில் அடைப்போம்'' என எச்சரிக்கை விடுத்தார். இதனால் அவர்கள், பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தற்காலிக கடைக்காரர்கள், ''காந்திஜி சாலை, கீழவாசல் சாலை, பழைய பேருந்து நிலையம் ஆகிய 3 பகுதிகளில் சுமார் 170-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றோம். இதற்காக அவர்கள் கேட்ட தொகையை வழங்கி விட்டோம். இந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவு எனக் கடைகளை அகற்றி வருகின்றனர். எனவே, நாங்கள் வழங்கிய தொகையைத் திரும்ப வழங்க வேண்டும் அல்லது கடைகள் போட மாற்று இடங்களை ஒதுக்கித் தரவேண்டும் இல்லையென்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE