ராமநாதபுரம்: தேவர் குருபூஜை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தர்மர் எம்.பி. பரமக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "வரும் அக்.30ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவும், அக்.31ம் தேதி தீபாவளி பண்டிகையும் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு விழாவும் அடுத்தடுத்த நாளில் வருவதால் பேருந்துகளுக்காக பொதுமக்கள் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்படும். குறிப்பாக, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் தான் அதிக அளவு பாதிக்கப் படுவார்கள்.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் படிப்பவர்களும், வேலை பார்ப்பவர்களும் முதல் நாளான அக்.30ம் தேதி சொந்த ஊர்களுக்கு பேருந்தில் வருவர். அன்றைய தினம் தான் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடக்கிறது. இதில், பங்கேற்க வரும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தீபாவளி பண்டிகைக்காக வருபவர்களுக்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் பேருந்து போக்குவரத்தை இயக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சிரமம் இன்றியும், காலதாமதம் இன்றியும் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியும். ஆகவே, தமிழக அரசும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் தேவர் குருபூஜை விழாவிற்கும், தீபாவளி பண்டிகைக்கும் சிறப்புப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும்" என்று தர்மர் எம்.பி கூறியுள்ளார்.
» தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில்: சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
» மருது சகோதரர்கள் நினைவுதினம்: திருவுருவ சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்த குன்றக்குடி அடிகளார்