தூத்துக்குடி: பெரியதாழை கிராமத்தில் வாகனத்தை மறித்து கைப்பந்து கேட்ட சிறுவர்களுக்கு கைப்பந்துகள், வலைகளை கனிமொழி எம்.பி வாங்கிக் கொடுத்து வாழ்த்தினார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியதாழை, புத்தன்தருவை, பூச்சிக்காடு, தட்டார்மடம், பொத்தகாலன் விளை, முதலூர், பண்ணம்பாறை, சாத்தான்குளம் பேரூராட்சி காமராஜர் சிலை, கொம்பன்குளம், கலுங்குவிளை, ஆனந்தபுரம், தைலாபுரம் ஆகிய பகுதிகளில் கனிமொழி எம்பி இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருந்தார். அப்போது பெரிய தாழை ஊராட்சிக்கு அவர் வேனில் சென்று கொண்டிருந்தபோது, அவரது வேனை சிறுவர்கள் சிலர் இடைமறித்தனர்.
உடனடியாக வேனை நிறுத்தச் சொன்ன கனிமொழி எம்.பி, வேனில் இருந்து இறங்கி அச்சிறுவர்களுடன் உரையாடினார். அவர்களது படிப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். அப்போது சிறுவர்கள் தங்களுக்கு கைப்பந்து வேண்டுமென அவரிடம் கேட்டனர். இதையடுத்து அவர்களை பெரியதாழை ஊராட்சியில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்ற கனிமொழி, கைப்பந்துகள், கைப்பந்து வலைகள் மற்றும் உபகரணங்களை வாங்கிக் கொடுத்து அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.
தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: "திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், இவ்வளவு அழகாகக் கொடிகளைக் கட்டி இருக்கின்றனர் என்று உடன் இருந்தவர்கள் சொன்னார்களாம். அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி அதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை. சிறிது தூரம் போன பிறகு, மரக்கிளைகளை வைத்து கொடிகள் கட்டப்பட்டு இருந்துள்ளது. அதைப் பார்த்த கருணாநிதி, இது தி.மு.கழகத்தினர் கட்டிய கொடி, இது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறினாராம்.
» மருது சகோதரர்கள் நினைவுதினம்: திருவுருவ சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்த குன்றக்குடி அடிகளார்
» பல்லாவரம் | வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை
இன்று இப்பகுதியில் உயர்த்தி பிடித்து இருக்கக் கூடிய திமுகவின் ஒவ்வொரு கொடியும், உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயார் செய்து கொண்டு வந்த கொடி என்று பார்க்கும்போது எனக்கு மிகப்பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தக் கொடிகளை உங்கள் கைகளில் யாரும் கொடுக்கவில்லை. நீங்களே உருவாக்கிக் கொண்டு வந்து, உயர்த்தி பிடித்துள்ளீர்கள். உங்கள் கைகளில் இருக்கும் இந்த திமுக கொடியைப் பார்க்கும்போது, எனக்கும் தலைவர் கருணாநிதியைப் பார்க்கும் உணர்வு வருகிறது.
100 நாள் வேலைத் திட்டம் என்பது காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால், மோடி ஆட்சியில் ஒவ்வொரு வருடமும் அத்திட்டத்திற்காகக் கொடுக்க வேண்டிய நிதியைக் குறைத்துக் கொண்டே வருகின்றனர். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு காங்கிரஸ் - திமுக இணைந்த இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரூ.400 சம்பளமும், 150 நாள் வேலையும் தருவதாகக் கூறினோம்.
ஆனால், ஆட்சி மாற்றம் என்பது நாடு முழுவதும் வரவில்லை. இந்த முறை வரவில்லை என்றாலும் கூடிய விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உங்களை மாதிரியே எனக்கும் உள்ளது. அப்போது அனைவரும் கேட்கக்கூடிய 100 நாள் வேலை 150 நாளாக நிச்சயம் உயர்த்தப்படும்" என்று கனிமொழி எம்பி கூறினார். இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.