திருநீர்மலை: பல்லாவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையர்களை வலைவீசி போலீஸார் தேடி வருகின்றனர்.
பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, சரஸ்வதி நகர் பிரதான சாலை, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன்(33). இவர், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லிஃப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் கேசவனின் தாயார் மோகனாவுக்கு (70) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் கேசவன்.
அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் நேற்று இரவு கேசவன் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவில் இருந்த பூட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த கேசவன், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் வைத்திருந்த சுமார் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து அவர் உடனடியாக சங்கர் நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கேசவனின் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
» கோவை | நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து!
» அதிமுக முக்கிய புள்ளியின் வீட்டில் 2-வது நாளாக தொடரும் ரெய்டு!
மற்றொரு சம்பவம்: சென்னை சிட்லப்பாக்கம் சாய் நகரை சார்ந்தவர் அரவிந்த் (35). இவர் நேற்று இரவு 10 மணியளவில் வீட்டை திறந்து போட்டுவிட்டு தூங்கி உள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தை சாதமாக்கிக் கொண்டு யாரோ வீட்டுக்குள் நுழைந்து ரூ.2,000 பணம் செல்போன் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிட்லப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.