கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே அரசுப் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பேருந்தில் இருந்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாய் காட்சியளித்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி இன்று காலை அரசுப்பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இப்பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், காலை 8 மணியளவில் மயிலேறிபாளையத்தை கடந்து ஒத்தகால் மண்டபம் பாலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது.
குபுகுபுவென புகை வெளியேறுவதை கவனித்த பேருந்தின் ஓட்டுநர், உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை சாலையில் ஓரத்தில் நிறுத்தி விட்டு, பேருந்தினுள் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்கிச் செல்லி உஷார்படுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் பேருந்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சில மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். எனினும் அதற்குள்ளாக பேருந்து முழுவதுமாக தீக்கிரையாகி எலும்புக்கூடாய் காட்சியளித்தது.
» துருக்கி ஏரோஸ்பேஸில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 5 பேர் பலி!
» அதிமுக முக்கிய புள்ளியின் வீட்டில் 2-வது நாளாக தொடரும் ரெய்டு!