மேட்டூர்: பூவைத் தேடி தேனீக்கள் வருவதுபோல, அதிமுகவை நாடி பல்வேறு கட்சிகளும் கூட்டணிக்கு வரும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த வனவாசியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பழனிசாமி பேசியதாவது: ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அதிமுக மட்டும்தான். திமுகவில் கருணாநிதி குடும்பத்தைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வர முடியாது. அதுவும், ஆண் வாரிசுகள் மட்டுமே திமுக தலைவராக முடியும். ஆனால், அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். எனக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் அதிமுகவை வழிநடத்துவர்.
நான் கனவு காணவில்லை. ஸ்டாலின்தான் பகல் கனவு காண்கிறார். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்குத்தான் சரிவு ஏற்பட்டது. அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. கூட்டணி இல்லாமல் அதிக வாக்குகள் பெற்ற அதிமுகதான் வலுவான கட்சியாகத் திகழ்கிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். கட்சியினர் கடுமையாக உழைத்து, அதிமுக வேட்பாளர்களுக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று நான் சொல்லவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளே சொல்கிறார்கள். எங்களை கூட்டணிக்கு வருமாறு தேசிய கட்சியே அழைத்தது. ஆனால், அதிமுகவுக்கு ஆட்சி, அதிகாரம் முக்கியமில்லை. மக்களுக்கு சேவை செய்வதே நோக்கம். யாரின் அழுத்தமும் இல்லாமல், நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்பதற்காகவே தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை. பூவைத் தேடி தேனீக்கள் வருவதுபோல, அதிமுகவை நாடி கட்சிகள் கூட்டணிக்கு தானாகவே வரும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி.
» வரும் தீபாவளி பண்டிகை முதல் ஆந்திராவில் இலவச காஸ் சிலிண்டர் திட்டம் அமல்
» ‘இளம்பெண் கடத்தி கொலை’ - நடக்காத சம்பவத்தை நீதிமன்றத்துக்கு கொண்டுவந்த வழக்கறிஞருக்கு கண்டனம்
ரூ.3 லட்சம் கோடி கடன்: தமிழகத்தை அதிமுக கடனாளியாக்கி விட்டதாகக் கூறிய திமுக அரசு, புதிதாக ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. வரி, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, கலால் வரி, ஜிஎஸ்டி என ரூ.56 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு கூடுதலாக வருவாய் வந்தும்கூட, கடன் வாங்கியுள்ளனர். அறநிலையத் துறை வருமானத்தைக் கொண்டு 10 கல்லூரிகளை உருவாக்கியுள்ளனர். அறநிலையத் துறை வருமானத்தை கோயில்களுக்குத்தான் செலவிட வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன், எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு வருகிறது என்று பாருங்கள். இவ்வாறு பழனிசாமி பேசினார்.