ஸ்டாலின் Vs இபிஎஸ் முதல் ‘டானா’ புயல் அப்டேட் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

“விவாதங்கள் உண்டு; விரிசல் இல்லை” - ஸ்டாலின்: “திமுக-வின் கூட்டணி விரைவில் உடையப்போகிறது என இதுவரை கற்பனையில்தான் எடப்பாடி பழனிசாமி மிதந்து கொண்டிருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர் ஜோசியராகவே மாறியிருக்கிறார். எப்போது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்கு புரியவில்லை. விரக்தியின் எல்லைக்கே போயிருக்கிறார். ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த பழனிசாமயைப் பார்த்து நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எங்களுடைய கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது பதவிக்கு வரவேண்டும் என்ற கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது கொள்கை கூட்டணி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மேலும், “எங்கள் கூட்டணிக்குள் விவாதம் நடக்கலாம்; எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம்; எங்களுக்குள் பல விவாதங்கள் நடக்கின்றபோது அதில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்கலாமே தவிர விரிசல் ஏற்படவில்லை; விரிசல் ஏற்படாது. மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

“அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும்” - இபிஎஸ்: “திமுக கூட்டணி வலுவான கூட்டணியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று நான் சொல்லவில்லை கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளே சொல்கிறார்கள். அதைத்தான் நான் வெளிப்படுத்துகிறேன். தேசிய கட்சியே எங்களை கூட்டணிக்கு அழைத்தது. ஆனால், யாருடைய அழுத்தமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும் என்பதற்காகவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை. பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். 2026 - ல் அதிமுக வெற்றி பெறுவது உறுதி” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2-வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை: மேட்டூர் அணை நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக புதன்கிழமை காலை 100 அடியை எட்டியது. கேரளா, கர்நாடகாவில் பெய்த தென்மேற்கு பருவமழையின் போது, மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஜூலை 27-ம் தேதி 71-வது முறையாக 100 அடியை எட்டியது. தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த ஜூலை 30-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கண்டனம்: கடந்த சில நாட்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு புரளியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், அதனை கையாண்ட முறைக்காக எக்ஸ், மெட்டா தளங்களை கடுமையாக சாடிய மத்திய அரசு, ‘சமூக வலைதளங்கள் குற்றத்தைத் தூண்டுகிறது’ என்றும் விமர்சித்துள்ளது. இதனிடையே, இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக டெல்லி போலீஸார் எட்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

“முதல் முறையாக எனக்காக ஆதரவு கேட்கிறேன்!” - பிரியங்கா: வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பு முற்பகல் 11.45-க்கு நடந்த பேரணியில் அவர் கலந்து கொண்டார். இதில் பிரியங்காவுடன் அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசும்போது, “பல தேர்தல்களில் கட்சிக்காக கடந்த 35 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறேன். ஆனால், எனக்காக உங்களிடம் ஆதரவு கேட்பது இதுவே முதல் முறை” என்றார்.

பவுன் ரூ.59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: தங்கம் விலை பவுன் ரூ.59,000-ஐ நெருங்குகிறது. சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,340-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.58,720-க்கு விற்பனை ஆனது.

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவும் சீனாவும் தங்களது தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் உறவை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சீன அதிபர் ஜின்பிங் கூறினார். இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகள் விரைவில் சந்திப்பது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இரு தினங்களுக்கு, லடாக் எல்லையில் சுமுகமாக ரோந்து பணியை மேற்கொள்ள இந்தியா, சீனா இடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது. இதன்மூலம் இரு நாடுகளின் எல்லையில் 4 ஆண்டுகள் நீடித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. இந்த முன்னெடுப்பை இரு தலைவர்களும் வரவேற்றனர். கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருவரும் பங்கேற்றனர். அப்போதும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

‘டானா’ புயல் அப்டேட்: 150+ ரயில்கள் ரத்து: வங்கக் கடலில் உருவான டானா புயல், ஒடிசா - மேற்கு வங்கம் இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிர புயலாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரு தினங்களுக்கு 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; தயார் நிலையில் மீட்புப் படை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. டானா புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை 24-ம் தேதி அதிகாலை வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். இது, வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக நாளை 24-ம் தேதி இரவு அல்லது நாளை மறுநாளான 25-ம் தேதி காலை கரையை கடக்கக் கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டானா புயல் காரணமாக நாளை (அக்.24) முதல் நாளை மறுதினம் (அக்.25) வரை 150-க்கும் மேற்பட்ட ரயில்களை தென் கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. டானா புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கனாஸ், பஸ்சிம், புர்பா மெதினிபூர், ஜார்கிரம், கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒடிசாவில் பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ், ஜகத்சிங்பூர் மற்றும் புரி ஆகிய இடங்களில் கன மழை பெய்யும்.

மீட்புப் படை: இதனிடையே, இந்திய கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிக்கு கப்பல்கள், விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையைச் (என்டிஆர்எப்) சேர்ந்த 13 குழுக்கள் விமானப்படை விமானங்கள் மூலம் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கொண்டு செல்லப்பட்டு தயாராக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் நாளை (அக்.24) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு கட்டிட விபத்து பலி 5 ஆக அதிகரிப்பு: பெங்களூருவில் கனமழை காரணமாக பல வீடுகளில் மழை நீர் புகுந்து இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழை காரணமாக இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE