தீபாவளி: கோவை கோட்டத்தில் இருந்து 1,260 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

By டி.ஜி.ரகுபதி

கோவை: தீபாவளிப் பண்டிகையையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்திலிருந்து 1,260 சிறப்புப் பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன. கோவையிலிருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டப் பகுதிகளுக்கும், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டப் பகுதிகளுக்கும், சாயிபாபா காலனியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி, உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இன்று (அக்.23) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி அதிகாலை வரை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகளும், சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், சேலம், ஈரோடு, ஆனைக்கட்டி, மேட்டுப்பாளையம், சத்தி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மேட்டுப்பாளையம் சாலை, சாயிபாபா காலனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து குன்னூர், கோத்தகிரி, உதகை, கூடலூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

அதேபோல், வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொதுமக்களின் வசதிக்காக கோவை, திருப்பூர், ஈரோடு மண்டலங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் பின்வருமாறு இயக்கப்பட உள்ளன.

அதன்படி, கோவை - மதுரைக்கு 210 பேருந்துகள், கோவை - திருச்சிக்கு 180 பேருந்துகள், கோவை - தேனிக்கு 160 பேருந்துகள், கோவை - சேலத்துக்கு 240 பேருந்துகள், ஈரோடு - மதுரைக்கு 90 பேருந்துகள், ஈரோடு - திருச்சிக்கு 60 பேருந்துகள், திருப்பூர் - மதுரைக்கு 110 பேருந்துகள், திருப்பூர் - திருச்சிக்கு 170 பேருந்துகள், திருப்பூர் - தேனிக்கு 40 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தவிர, வழக்கமான பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், காந்திபுரம் மற்றும் உக்கடம் நகரப் பேருந்து நிலையங்களில் இருந்து சூலூர் பேருந்து நிலையத்துக்கு இணைப்புப் பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்படும். என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE