புதுச்சேரி: பேரவைத் தலைவருடன் ஏற்பட்ட மோதலால் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து அரசு ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ நேரு நீக்கப்பட்டுள்ளார். இது பேரவை அலுவலக விதிக்கு எதிரானது என சிபிஎம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் மாமூல் கேட்டு தராததால் பங்க் கடையில் சந்திரன் என்பவர் மீது தாக்குதல் நடந்தது. இதில் சந்திரனுக்கு அரசு மருத்துவமனையில் சரியான முறையில் சிகிச்சை தரப்படவில்லை என்று அரசு ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ நேரு, அவரை ஸ்ட்ரெக்சரில் தள்ளிக் கொண்டு வந்து ராஜ் நிவாஸ் எதிரே போராட்டம் நடத்தினார். இதையடுத்து முதல்வர் அறைக்குச் சென்று நடந்ததை விவரிக்கும் போது நேருவுக்கும், பேரவை தலைவர் செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சட்டமன்ற உறுதிமொழிக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து நேருவை நீக்க உள்ளதாக பேரவைத் தலைவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவை செயலாளர் தயாளன் இன்று பிறப்பித்த உத்தரவில் எம்எல்ஏ நேரு சட்டமன்ற உறுதிமொழிக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாஸ்கர் எம்எல்ஏ அப்பொறுப்பில் நியமிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், குழு உறுப்பினர்கள் யாரும் மாற்றப்படவில்லை. உறுப்பினர்களாக எம்எல்ஏ-க்கள் ஏகேடி ஆறுமுகம், அனிபால் கென்னடி, சிவசங்கர், அசோக் பாபு, ராமலிங்கம் ஆகியோர் தொடர்கின்றனர்.
அலுவலக விதிக்கு எதிரானது- சிபிஎம்: இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் மாநில செயலர் ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கையில், "எம்எல்ஏ சட்டமன்ற அலுவலக விதிக்கு எதிரானதாகும். பேரவைத் தலைவர் செல்வம் வானளாவிய அதிகாரம் படைத்தவராக நடந்து கொள்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற விதிகள் படி தேர்வு செய்யப்படும் குழுக்கள் அடுத்த பட்ஜெட் காலம் வரையில் அதாவது ஓராண்டு பதவிக்காலம் கொண்டதாக இருக்கும்.
» கிண்டியில் 25-ம் தேதி அரசு சார்பில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு
இது தன்னிச்சையாக சபை தலைவரால் நியமிக்கப்படும் நியமனம் அல்ல, அவ்வாறு 2024 ஆகஸ்ட்டில் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் எம்எல்ஏ நேரு தலைமையில் உறுதிமொழிக் குழு தேர்வு செய்யப்பட்டு. 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதியில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக, 2024ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியில் உறுதிமொழி குழுவின் தலைவர் நீக்கப்பட்டு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பது வரம்பு மீறிய செயல்.
சட்டப்பேரவைத் தலைவர் அரசியல் சார்பற்றவராக, சட்டப்பேரவை மாண்பு மற்றும் மரபுகளை பின்பற்றுபரவாக இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் பாஜக கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது முதல் முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு அனைத்திலும், தலையிடுவது புதிய அறிவிப்புகளை வெளியிடுவது, என தன் வகிக்கும் பதவிக்கு இழுக்கை ஏற்படுத்தி வருகிறார் பேரவைத் தலைவர் செல்வம். முதல்வரும் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.
பாஜக கூட்டணி ஆட்சியில் எதுவும் நடக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் முதல்வர், அமைச்சர்கள், சபைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அதிகார வரம்பை ஒழுங்குபடுத்திட மாநில முதல்வர் தலையிடவேண்டும்.
சட்டப்பேரவை தலைவர் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் சட்டமன்ற அலுவலக விதிக்கு எதிராக, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுதிமொழிக் குழு தலைவர் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று மாநில செயலர் ராஜாங்கம் கூறியுள்ளார்.