நஞ்சைபுகழூர் காவிரி கதவணை பணிகள் 76% நிறைவு: சட்டப் பேரவை உறுதிமொழி குழுத் தலைவர் வேல்முருகன் தகவல் 

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: நஞ்சை புகழூர் காவிரி கதவணை பணிகள் 76 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சட்டப்பேரவை உறுதிமொழி குழுத் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர்களாக ச.அரவிந்த் ரமேஷ், ரா.அருள், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சா.மாங்குடி, எம்.கே.மோகன் ஆகியோர் குழுவின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் கரூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

காவிரி ஆற்றில் நஞ்சைபுகழூரில் கட்டப்படும் கதவணையை ஆட் சியர் மீ.தங்கவேல் தலைமையில் எம்.பி-யான செ.ஜோதிமணி, எம்எல்ஏ-க்கள் ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலையில் குழுத் தலைவர் தி.வேல்முருகன் மற்றும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, வேல்முருகன், ''கடந்தாண்டே 70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது 76 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. எதனால் ஏன் இத்தனை கால தாமதம் ஆகிறது?'' என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை செயற்பொறியாளர் சாரா, ''காவிரி ஆற்றில் வெள்ளம் வந்ததன் காரணமாகவும், நவீன தொழில் நுட்ப முறையில் மதகுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தாமதம் ஏற்பட்டது'' என தெரிவித்தார். இயன்றவரை பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேல்முருகன் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ''அரசால் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.10 கோடியில் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டோம். நஞ்சை புகழூர் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டோம். ரூ.495 கோடியில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் ரூ.406 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 76 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் குடிநீர் மற்றும் விவசாயப் பணிகளுக்கு உதவிகரமாக அமையும்.

3 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது. நவீன முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் வெள்ளம், இயற்கை சீற்றங்களின் போது அதனை எளிதில் கையாளும் வகையில் மிகவும் தரமாக மதகுகளை அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். சில இடங்களில் மதகுகள் அவற்றின் ஆயுள் காலத்திற்கு முன்பே உடைத்துக் கொண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நொய்யல் ஆறு காவிரியில் கலப்பதால் நீர் ஆதாரங்கள் பாழ்படாத வகையில் அவற்றில் கழிவுகளை கலக்கும் தொழிற்சாலைகளை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இனி தொடங்கப்படும் தொழிற்சாலைகள் பூஜ்ய கழிவு முறையில் மட்டுமே செயல்படும் வகையில் உரிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது'' என்றார்.

தொடர்ந்து தோரணக்கல்பட்டி ஆவின் நிறுவனத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களை குழுவினர் சந்தித்தனர். தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களிளும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வின் போது பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் சற்று கோபமடைந்த வேல்முருகன் தமிழ்நாட்டில் உள்ளோம். எனவே தமிழில் ஒளிபரப்பு செய்யுங்கள் என அதிகாரிகளை கடிந்துகொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE