மதுரையில் முறிந்து கீழே விழும் பழமையான மரங்கள்: இரவில் மின்தடை; போக்குவரத்து பாதிப்பதால் மக்கள் அவதி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: இரவு நேரங்களில் கனமழைக்கும், சூறாவளி காற்றிற்கும் மதுரை மாநகரில் உள்ள பழமையான மரங்கள் கீழே நொடிந்து மின் கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்படுவதோடு போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. அதனால், பொதுமக்கள் இந்த மழைக்காலத்தில் இரவு நேரங்களில் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

மதுரை நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. மதுரையின் பெரும்பாலான அரசு கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் கண்மாய்களாகவும், அதன் பாசனப்பகுதியாகவும் இருந்ததால் மிகவும் தாழ்வான பகுதிகளாக உள்ளன. அதுபோல், மேடு, பள்ளங்களான சாலைகள், தூர்வாரப்படாத மழைநீர் கால்வாய் கட்டமைப்புகள் போன்றவற்றால் மழைநீர் வடிந்தோடுவதற்கு வழியில்லாமல் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்து வருகிறது.

மதுரை மாநகரின் சாலைகளில் உள்ள பெரும்பாலான மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை. தற்போது வடகிழக்கு பருவ மழை கன மழையாக பெய்து வருவதால் இந்த மரங்கள், சமீப காலமாக சூறாவளி காற்றுக்கும், கனமழைக்கும் நொடிந்து விழுந்து வருகின்றன. சாலைகளில் விழும் மரங்களால் மின் கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்படுகிறது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள், வாகன ஓட்டிகள் இந்த மழைக்காலத்தில் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.

மழை பெரும்பாலும் மாலை தொடங்கி நள்ளிரவு வரை விடாமல் பெய்வதால் மழைநீரை வெளியேற்றுவதில் மாநகராட்சி பணியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் சாலைகளில் உள்ள பழமையான மரங்கள் நொடிந்து மின் கம்பிகள் மீது விழுவதால் மின் வெட்டும் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். நொடிந்து விழுந்த மரங்களை இரவு நேரத்தில் உடனடியாக அகற்றவதற்கு மின்வாரியத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை.

அதனால், பருவமழை முடியும் வரையில் சாலைகளில், குடியிருப்புப் பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நொடிந்து விழக்கூடிய அபாயமுள்ள மரங்களை அகற்றவும், கீழே விழுந்த மரங்களை வெட்டி அகற்றவும் மின்சார வாரியம், மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மின்சார வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநகரப் பகுதியில் முக்கிய சாலைகளில் நொடிந்து விழக்கூடிய 200-க்கும் மேற்பட்ட மரங்களை கணக்கெடுத்து அவற்றை அகற்ற மாநகராட்சி, தீயணைப்புத்துறை ஒத்துழைப்பை கேட்டுள்ளோம். மின்சார வாரியத்தில் மரங்களை வெட்டி அகற்ற போதுமான பணியாளர்கள் இல்லை.

ஆனாலும், மரங்கள் மின் பாதையில் விழுந்து கிடப்பது, மின் கம்பி அறுந்து விழுதல், மின் கம்பங்கள் சாய்ந்து இருத்தல் போன்றவை நிகழ்ந்தால் உடனடியாக சரி செய்வதற்கு 12 குழுக்களை நியமித்துள்ளோம். பருவமழை தொடர்புடைய புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ஒவ்வொரு கோட்டத்திலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அவர்கள் செல்போன் எண்களை வழங்கியுள்ளோம்" என்று உயர் அதிகாரி கூறினார்.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "நாங்களே போக்குவரத்திற்கும், திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் இடையூறு ஏற்படுத்தும் மரங்களை வெட்டுவதற்கே வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்றே வெட்டுவோம். அவரது அனுமதியில்லாமல் பசுமையான மரங்களை வெட்ட முடியாது. மின்சார வாரியம், அபாயகரமான மரங்களை கணக்கெடுத்து வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று வெட்டினால், வெட்டிய மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

மரம் விழுந்து அமைச்சர் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து சேதம்: கனமழை காரணமாக மதுரை சின்ன சொக்கிகுளம் வல்லபாய் தெருவில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீட்டு சுற்றுச் சுவர் அருகே இருந்த பழமையான மரம் நேற்று இரவு நொடிழுந்து விழுந்தது. மரம் விழுந்ததால் அவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்தது.

அமைச்சர் வீடு அருகே விழுந்த மரம் என்பதால் மின்சா வாரியம், மாநகராட்சி, தீயணைப்புத் துறை முழுவீச்சில் களம் இறக்கி உடனடியாக அந்த மரத்தை அகற்றும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இதேபோல், அதிகாரிகள் பொதுமக்கள் வசிக்கும் பிற குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் விழும் மரங்களையும் அகற்றி மின்சாரம் தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE