திருவாரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம்: விவசாயப் பணிகள் பாதிப்பு

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: தமிழ்நாடு முழுவதும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டாக்பியா (தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம்) போராட்டக் குழு சார்பாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்காடிகளில் பல மடங்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும், விற்பனையாளர்களாக தொலைதூரம் சென்று பணிபுரிபவர்கள் பணி மாறுதல் செய்யப்பட வேண்டும், மளிகைப் பொருட்களை கட்டாயமாக அங்காடிகளில் இறக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 21ம் தேதி முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அதனை ஒட்டி இயங்கும் ரேஷன் கடைகள் மற்றும் 550 ரேஷன் கடைகளில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. குறிப்பாக, 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முழுமையாக இயங்கவில்லை.

இதன் காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா சாகுபடி பயிர்களுக்கு உரம் வாங்க முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, சம்பா சாகுபடி பயிர்கள் பயிரிடப்பட்டு 20 முதல் 35 நாட்களை எட்டியுள்ள சூழலில், அடியுரம் இட வேண்டி உள்ளது. இந்நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் திறக்கப்படாததால் இடு பொருட்கள் கிடைக்கவில்லை. இதனைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் சில்லறை விலையில் யூரியா, டிஏபி போன்றவற்றை கூடுதல் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றன.

ஒரு சில கடைகளில் குருணை பூச்சி மருந்துகளை வாங்கினால் மட்டுமே உரம் வழங்க முடியும் என விவசாயிகளை நெருக்கடி செய்கின்றனர். மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களையொட்டி செயல்படுகின்ற ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் ரேஷன் கடைகள் திறக்கப்படாததால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து டாக்பியா சங்கத்தின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் கேசவன் கூறியதாவது: “சேதாரம் அடையும் அரிசிக்கு வெளிச்சந்தை விலையை விட, கூடுதலாக இரண்டு மடங்கு விலை நிர்ணயம் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு தொடக்கத்தில் 6,000 ரூபாயும், அதிகபட்சமாக 13 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் சூழலில், ஊழியர்களை அவர்களது இருப்பிடத்தில் இருந்து அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பணியமர்த்தாமல் அதிகபட்சம் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரேஷன் கடைகளில் பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்த நிலையை போக்க வேண்டும் என்பதற்காகவே போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம். காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி மூன்று நாட்கள் ஆன பின்னரும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இருப்பினும் எங்களது போராட்டம் தீவிரமடையும்” என்று கேசவன் கூறினார்.

சம்பா சாகுபடி விவசாயிகளின் நிலையையும், தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் நலன் கருதியும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு சங்க ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து விரைவாக உரிய தீர்வைக் கண்டு போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கூட்டுறவு ஊழியர்களும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE