அரியலூர் மாவட்டத்தில் ரூ.17.73 கோடியில் வளர்ச்சித் திட்ட பணிகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

By பெ.பாரதி

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் அரசின் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய பேருந்துகள் இயக்க நிகழ்ச்சி இன்று (அக்.23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட, மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, விளாங்குடி ஊராட்சி பெரிய ஏரியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய மதகுகள் கட்டும் பணியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ.9.95 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியையும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கு 2 புதிய பேருந்துகள், திருப்பூருக்கு ஒரு பேருந்து என 3 புதிய பேருந்துகளையும் தொடங்கி வைத்தார்.

பின்னர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் வாரச் சந்தை கட்டும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்கும் பணிகளையும் அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE