புதுச்சேரி: அட்சயபாத்திராவில் சைவ உணவு தருவதால், புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்காக அரசு தரப்பில் முட்டை அவித்து தர ரூ.38 லட்சம் மதிப்பில் சமையல் கூடங்களில் புதிய சாதனங்கள் நிறுவப்பட்டன.
புதுச்சேரியில் மதிய உணவு அட்சயபாத்திரா அமைப்பு மூலம் சைவ உணவு தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் தரப்படுகிறது. கூடுதலாக அரசு தனியாக சமையல் கூடங்களில் முட்டை மட்டும் அவித்து வழங்குகிறது. மதிய உணவில் வாரம் மூன்று நாட்கள் முட்டை தரப்படுகிறது. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு சமையல் கூடங்களில் முட்டைகள் அவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது முட்டைகளை அவிப்பதற்கு ஏம்பலம், சண்முகாபுரம் சமையல் கூடங்களில் புதிய சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளது. புதிய சாதனங்கள் நிறுவப்பட்ட சமையல் கூடத்தை கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று துவக்கி வைத்தார். வரும் நவம்பர் மாதம் முதல் மாணவர்களுக்கு சண்முகாபுரம், ஏம்பலம் மைய சமையல் கூடங்களில் இருந்து முட்டை நேரடியாக தரப்படும். இதன் மூலம் 55 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்.
இதுபற்றி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "புதுச்சேரியில் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு புரதச் சத்து வேண்டும் என்ற காரணத்தால் நமது அரசாங்கம் வாரத்தில் இரண்டு நாட்கள் அவர்களுக்கு முட்டை வழங்கி வந்தது. கரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் அது மூன்று நாட்களாக உயர்த்தப்பட்டது.
» முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்தம்: விரைவில் முதல்வர் திறந்து வைப்பார் என அமைச்சர் தகவல்
» தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு: சாம்சங் தகவல்
இந்த நிலையில் ரூ.38 லட்சத்தில் சண்முகாபுரம், ஏம்பலம் சமையலறை கூடங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு சண்முகாபுரத்தில் 32 ஆயிரம் முட்டைகளும், ஏம்பலத்தில் 23 ஆயிரம் முட்டைகளும் அவிக்கப்பட்டு விநியோகம் செய்யுமளவுக்கு அங்கு புதிய சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளது” என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.