கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கத்தில் கால நிலை பூங்கா, முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில் 16 ஏக்கர் பரப்பளவில் ரூ. 15.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கால நிலை பூங்காவை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தையும் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதிமற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா,சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமஉறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா,முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், செங்கல்பட்டு ஆட்சியர் ச.அருண்ராஜ், தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன் குமார், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, தலைமை நிர்வாக அலுவலர் மருத்துவர் பால் பிரின்சிலிராஜ்குமார், கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், செயற்பொறியாளர் ராஜன்பாபு, எம்எல்ஏ வரலட்சுமி, துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: கால நிலை குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் பல்வேறு செடிகள், செயற்கை காடுகள், மழைநீர் தேக்கம், குளம், சிறுவர் பூங்கா போன்றவற்றுடன் அமைக்கப்படும் இப்பூங்காவை இன்னும் ஒரு மாதத்துக்குள் முதல்வர் தொடங்கி வைப்பார். அன்றைய தினமேமுடிச்சூரில் அனைத்து வசதிகளுடன் ரூ. 42.70 கோடியில் 150 பேருந்துகள் நிறுத்த கூடிய ஆம்னி பேருந்து நிலையத்தையும் முதல்வர் தொடங்கி வைப்பார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுகாதாரம், குடிநீர், கழிவறைகள், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை அதிகப்படுத்த இருக்கிறோம் என்றார்.