சென்னை: தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் அளவுக்கு தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தரப்பில் உயர் நீதி மன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்கத்தின் இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் புதிதாக தொழிற்சங்கத்தை தொடங்கியுள்ளனர்.
அதை பதிவு செய்து தரக்கோரி தொழிற்சங்கங்களின் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிடக் கோரி அந்த சங்கத்தை சேர்ந்த எல்லன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், சாம்சங் நிறுவனத்தின் பெயரை புதிய தொழிற்சங்கத்துக்கு பயன்படுத்தக்கூடாது என நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், தங்களது தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்து கொடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாம்சங் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன், தங்களது நிறுவனத்தில் அரசியல் ரீதியிலான தலையீடு ஒருபோதும் இருக்கக்கூடாது என்றும், நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை அல்ல என்றும் வாதிட்டார்.
மேலும், “தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்தால் தங்களுக்கு 100 மில்லியன் டாலர் அளவுக்கு (ரூ.815.70 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்களது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தாமல் தொழிற்சங்கம் தொடங்க தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும்” என வாதிட்டார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், “தொழிற்சங்க சட்டத்தின்படி சங்கத்தை பதிவு செய்வது என்பது அடிப்படை உரிமை. கொரியாவிலும்கூட சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளது. இதுபோல பல நிறுவனங்களின் பெயரில் தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணையை நவ.11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.