பத்திரிகையாளர்களுக்கு தகுதிக்கு ஏற்ப தீபாவளி ‘சன்மானம்’: திருப்பூர் மாநகராட்சி மேயர் ‘கவனிப்பால்’ விமர்சனம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பத்திரிகையாளர்களுக்கு தகுதிக்கு ஏற்ப தீபாவளி சன்மானம் வழங்கியதாக, திருப்பூர் மாநகராட்சி மேயர் விவகாரம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பத்திரிகையாளர்கள் பெயரில் மக்களையும், அரசு அலுவலர்களையும் மிரட்டி மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த மாதம் கோவை மாவட்ட ஆட்சியராக இருக்கும் கிராந்திகுமார்பாடி அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக வாட்ஸ்-அப் எண்ணையும் வெளியிட்டிருந்தார். இது தமிழ்நாடு அளவில், களத்தில் நேர்மையாக உழைக்கும் பத்திரிகையாளர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இன்றைக்கு பல மாவட்டங்களில், தீபாவளி வசூல் படுஜோராக நடந்து வருகிறது.

பத்திரிகையாளர்கள், அரசு அலுவலகங்களில் தரகர்களாக செயல்படும் நபர்கள் என பல்வேறு மட்டங்களிலும் இது தொடர்கிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகரில் போலி பத்திரிகையாளர்களை பலரையும் ஊக்குவிக்கும் வகையில், தீபாவளிக்கு இனிப்பு மற்றும் தகுதிவாரியாக சன்மானம் தந்து, திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் கடந்த ஆண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அந்த எண்ணிக்கை 300-ஐ தாண்டவே இறுதியில் அதிர்ச்சி அடைந்தார். இதில் பலர் தீபாவளியின் போது மட்டும் வெளியே நடமாடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது, மேயரின் வார்டில் உள்ள இ-சேவை மையத்தில் வைத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்களுக்கு, மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் தீபாவளிக்கு இனிப்புகள் மற்றும் சன்மானம் நேற்று முன்தினம் (அக்.21) இரவு ரகசியமாக வழங்கியிருப்பது, வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் விமர்சிக்க துவங்கிவிட்டனர்.

திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “தமிழ்நாட்டில் நம்பர் 1 மாநகராட்சியாக திருப்பூர் இருப்பதாக பொதுவெளிகளில் மேயர் பெருமைப்பட்டுக் கொண்டாலும், உள்ளபடியே நாளுக்கு நாள் மாநகராட்சி மீது மக்களுக்கு அதிருப்தியே எழுந்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு இதுபோன்ற தவறான ஊக்குவிப்புகளால், அவர் யாரை திருப்தி செய்ய நினைக்கிறார் என்று தெரியவில்லை. மாநகராட்சி பிரச்சினைகளை வெளிக்கொண்டுவராமல் இருக்க, இது போன்று செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது” என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE