6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி நவ.7-ம் தேதி பேரணி: புதிய தமிழகம் கட்சி அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நவ.7-ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தி்ன் பூர்வீக தமிழ் குடிமக்களான தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர் ஆகிய இரு சமூக இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமையை தட்டிப் பறிக்கும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 2006-ம் ஆண்டு வன உரிமை சட்டத்தின்படி ஒரு குடும்பத்துக்கு தலா 10 ஏக்கர் நிலம் வழங்கி, ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமையை மாஞ்சோலையிலேயே நிலை நாட்ட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடி, பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். அந்நிய முதலீட்டின் மூலம் தொடங்கப்படும் தொழிற்சாலைகளை சென்னையை மட்டும் மையமாக வைத்து தொடங்காமல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை போன்ற தென் மாவட்டங்களில் பரவலாக தொடங்க வேண்டும். தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் இளைஞர்களுக்கு எதிராகவும், வடக்கு மாவட்டங்களில் ஆதிதிராவிடர்களுக்கு எதிராகவும் அதிகரித்து வரும் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்.

தென் தமிழகத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள மற்றும் வருங்காலத்தில் தொடங்கப்படவிருக்கும் தொழிற்சாலைகளில் கடினமான, மதிப்பு குறைவான பணிகளுக்கு மட்டுமே அப்பகுதி இளைஞர்களை பயன்படுத்தும் போக்கினை தடுத்து, உயர் பதவிகளில் முன்னுரிமை தர வேண்டும். அதற்கான விதிமுறைகளை புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே உருவாக்க வேண்டும்.

இந்த 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் நவ.7-ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE