யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடப்போவதில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

By KU BUREAU

மதுரை / சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்புக் கேட்டாலும், அவரை விடப்போவதில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மனைவியின் பிரசவம் நடந்த மகப்பேறு அறுவைசிகிச்சை அரங்கில் நுழைந்த யூடியூபர் இர்பான்,தனது குழந்தையின் தொப்புள்கொடியை தானே அகற்றியது கண்டிக்கக்கூடியது. அறுவைசிகிச்சை அரங்கில் மருத்துவர் அல்லாத ஒருவர் செல்வதே தவறு. இந்த செயல் தேசிய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை மீறியது. மருத்துவ சட்டங்களை மீறியதாக அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சட்டரீதியாக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே, இர்பான் கருவில் இருந்த தனது குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய துபாயில் ஸ்கேன் எடுத்துள்ளார். அங்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தெரிவிப்பதற்கு தடை விதிக்கும் சட்டங்கள் இல்லை. எனினும், அவர் தனது சமூக வலைதளத்தில் பாலினத்தைத் தெரிவித்ததற்காக, மருத்துவத் துறை நோட்டீஸ் வழங்கியது. இதையடுத்து, அவர் அந்தவீடியோவை நீக்கிவிட்டு, மன்னிப்புக் கேட்டார். ஆனால், தற்போதைய விவகாரத்தில் அவர் மன்னிப்புக் கேட்டாலும் விடப்போவதில்லை.

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுஅட்டை வழங்குவது தொடர்பாக 234 தொகுதிகளிலும் சிறப்பு முகாம்நடத்தப்பட்டு, 1.45 கோடி பேருக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கூடுதலாக ஒரு மாதம் சிறப்பு முகாம் நடத்தி, காப்பீடு அட்டை பெறாதவர்களுக்கு, உடனடியாக அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புற நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நிலையை இப்படி இருக்கும்போது, மக்கள் அரசு மருத்துவமனையை நம்பவில்லை என்றுஎப்படிக் கூற முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.

காவல் நிலையத்தில் புகார்: மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் இளங்கோ, சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், இர்பான் செயலை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட மருத்துவர் நிவேதிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அறுவைசிகிச்சை அறையில் அனுமதியின்றி அத்துமீறி நுழைதல், தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் செயல்படுதல், பணம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்தல் ஆகியவற்றைக் குறிப்பிட்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் மீது விசாரணை நடந்து வருவதாகவும், இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர் நிவேதிதா மீது தமிழ்நாடு மருத்துவகவுன்சிலிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE