டானா புயல் எப்போது, எங்கு கரையைக் கடக்கும்? - மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுப்பெற்று நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், வரும் 23-ம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக் கூடும். டானா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக் கூடும். இது, வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24-ம் தேதி இரவு அல்லது 25-ம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘டானா’ புயலை எதிர்கொள்ள தயார்: ஒடிசா முதல்வர்: டானா புயலை எதிர்கொள்ள ஒடிசா தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். மேலும், “வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு அதிகம் என கணிக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர், தீயணைப்பு படையும் தயார் நிலையில் உள்ளது. புயல் நிலவரத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி? - நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20% போனஸ்: தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 43,683 பணியாளர்களுக்கு ரூ. 44.42 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.
புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்: பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கசான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவும் மோதல்கள் அனைத்தும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று விளாதிமிர் புதின் உடனான பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
“திமுக கீழே விழுந்துவிடும்” - இபிஎஸ் விமர்சனம்: சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் பெரும்பாலான துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஊழல் பட்டியல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளை அறிக்கை எனக்காக கேட்கவில்லை; மக்களுக்காகத் தான் கேட்டேன். திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால், அங்கு புகைய ஆரம்பித்து விட்டது. கூட்டணி குறித்து தேர்தலின் போதுதான் சொல்ல முடியும்” என்று கூறினார்.
தவெக நிர்வாகி குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்: நடிகர் விஜய் கட்சியான தவெக-வின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ல் விக்கிரவாண்டியில் நடக்கிறது. இந்த மாநாட்டு பணிகளில் புதுச்சேரி மாநிலச் செயலர் சரவணன் ஈடுபட்டு வந்தார். மாநாட்டுப் பணிகளில் இருந்து வீடு திரும்பிய அவர் திங்கள்கிழமை மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். இறந்த புதுச்சேரி மாநில தவெக செயலர் சரவணனின் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புதிய லோகோ: இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள நான்கு டெலிகாம் நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்றாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 4ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்கியது. இந்தச் சூழலில் நிறுவனத்தின் இயக்கத்தில் புது பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு, மலிவான கட்டணம் மற்றும் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு ஏழு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
‘யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது’ - ‘குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது. இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும், விடமாட்டோம். அவர் மன்னிப்புக் கேட்டாலும், அதை ஏற்க முடியாது. இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. மருத்துவர் நிவேதிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பயிற்சியை தொடர தடை விதிக்க மருத்துவ கவுன்சில் சார்பில் பரிந்துரைக்கப்படும். தவறு செய்தவர்களுக்கு அரசு நிச்சயம் தண்டனை வழங்கும்’ என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான இர்பான் - ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணசாமி அறிவிப்பு: அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 7ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.