கோவை | பெட்ரோல் பங்கில் கியாஸ் நிரப்பிய போது வேன் தீப்பிடித்து எரிந்து சேதம் 

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் பெட்ரோல் பங்க்கில் கியாஸ் நிரப்பும் பொழுது, வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் இயங்கி வரும் ஒரு பெட்ரோல் பங்கிற்கு, இன்று காலை முதல் வாகன ஓட்டிகள் வழக்கம் போல் வந்து தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், கியாஸ் உள்ளிட்ட எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது இன்று மதியம் ஒரு வேனில் ஒருவர் பங்கிற்கு வந்தார். அங்குள்ள எரிபொருள் நிரப்பும் இடத்தில் வேனை நிரத்தி கியாஸ் நிரப்பிக் கொண்டிருந்தார். நிரப்பி முடித்தவுடன் அந்த வேனை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஓட்டுநர் முயற்சித்தார். ஆனால், ஸ்டார்ட் ஆகவில்லை. மறுபடியும் வேனை ஸ்டார்ட் செய்த சில நிமிடங்களில் கரும்புகை வந்தது. இதையடுத்து வேனின் ஓட்டுநர் கீழே இறங்கிய சில நிமிடங்களில் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தீப்பிடித்து எரிந்ததில் கருகிக் கிடக்கும் வேன்.

இதனால் அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள், வேனை அங்கிருந்து சில அடி தள்ளி நிறுத்தினர். அடுத்த சிறிது நேரத்தில் வேன் முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. பங்க் ஊழியர்கள் அங்கிருந்த தீயணைக்கும் கருவியை பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. தொடர்ந்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிறிது நேரம் போராடி வேனில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வேன் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

இது தொடர்பாக கடைவீதி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதில், வேனை ஓட்டி வந்தவர் ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என தெரியவந்தது. வேனின் கியாஸ் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து தீப்பிடித்து இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE