செங்கல்பட்டு: அரசுப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: மறைமலை நகர் அருகே நின்னைக்கரை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் செயல் விளக்கம் இன்று காலை நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தின் சார்பில், விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நின்னைக்கரை அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் சீனி.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தீயணைப்பு நிலைய அலுவலர் சலீம் பங்கேற்று, பட்டாசு வெடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார். மேலும், மெல்லிய ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. வெடிகளை வெடிக்கும் போது அருகில் வாளியில் எப்போதும் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். கண்களுக்கு அருகில் வைத்து வெடிகளை வெடிக்கக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும், தீ பற்றினால் அதை மேலும் பரவாமல் தடுக்க குளிர்வித்தல், தனிமைப்படுத்துதல், காற்றைத் தடுக்கும் போர்வை முறை குறித்து விளக்கிய அவர், போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ், எரிவாயு விபத்து போன்றவற்றிற்கு அழைக்க வேண்டிய அவசர உதவி எண்கள் குறித்தும் விளக்கினார். தீத்தடுப்பு முறைகளும் செய்து காட்டப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE