இடஒதுக்கீடு பற்றி பேச என்ன தகுதி உள்ளது? - திருமாவளவனுக்கு எல்.முருகன் கண்டனம்

By KU BUREAU

சென்னை: இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் கூறியதாவது: அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் சட்டரீதியாக போராடி பெற்றுள்ளோம். அருந்ததியின மக்கள் மட்டுமின்றி, அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ஒண்டிவீரனின் 251-வதுநினைவு நாளில் மத்திய அரசுசார்பில் பிரதமர் மோடி அஞ்சல்தலையை வெளியிட்டு, ஒண்டிவீரனுக்கு பெருமை சேர்த்தார். திருமாவளவன் எப்போதாவது திருநெல்வேலி சென்று ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தியது உண்டா? தேர்தல்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட, ஒரு இடத்தையாவது அருந்ததியினருக்கோ அல்லது தேவேந்திரருக்கோ திருமாவளவன் கொடுத்திருப்பாரா? இடஒதுக்கீடு பற்றி பேச துளியும் தகுதியற்ற தலைவர் திருமாவளவன். ஆன்மிகத்தையும், சனாதனத்தையும் நாங்கள் ஆதரிப்போம். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை சட்டரீதியாக பெற்றுத் தருவதில் என்னுடைய பங்கு என்ன என்பது சமுதாயத்துக்கு தெரியும்.

அந்தந்த மாநிலங்கள், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கிக் கொள்ளலாம் என்று அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்கி நீதிமன்ற தீர்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருமாவளவன் மறுஆய்வு மனுவை கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், திருமாவளவன் எதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்? நான் ஆர்எஸ்எஸ்-ஸை சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழக ஆளுநர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது யூகங்கள்தான் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE