மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அரசு அதிகாரிகள் துளியும் முயற்சிப்பது இல்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்திதெரிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அதேபோல் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கின்றன. இருப்பினும், அந்த உத்தரவுகளை அதிகாரிகள் சரியாக நிறைவேற்றுவதில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அதன் பிறகும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருப்பதால் நீதிமன்றத்தின் சுமை அதிகம் ஆகிறது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நீதிமன்ற உத்தரவுகளைக் கண்டிப்புடன் செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்ற மாட்டார்கள். உத்தரவுகளை நிறைவேற்ற துளி கூட முயற்சி செய்வதில்லை. இதில் எதுவும் செய்ய முடியாத நிலைதான் தற்போதுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்பதை அரசும்,அதிகாரிகளும் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளனர். இதைதலையெழுத்து என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
இந்தப் போக்கு நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கெடுக்கும் வகையிலும், நீதிமன்றத்தை நம்ப முடியாத சூழலையையும் உருவாக்கி வருகிறது. எனவே, இந்த மனு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மற்றும் தமிழக தலைமை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்