சீமான் Vs பாஜக Vs திமுக முதல் தங்கம் விலை புதிய உச்சம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

“எல்.முருகன் கூறியதை எதிர்க்கிறேன்” - சீமான்: “உள்ஒதுக்கீட்டை எதிர்த்ததால் திருமாவளவன் முதல்வராகக் கூடாது என எல்.முருகன் கூறியதை எதிர்க்கிறேன். இரண்டு முறை தோல்விடையந்த அவர் மத்திய அமைச்சராகும்போது திருமாவளவன் முதல்வராகக் கூடாதா என்ற உணர்வு, உரிமை, உறவில் கூறுகிறேன்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், “தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை வந்ததால்தான் கருணாநிதி அதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக்கினார். புதுச்சேரியில் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து சிறப்பாக உள்ளது. நாங்கள் பொறுப்புக்கு வந்தால் அதையே தமிழ்நாட்டுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தாக்கிவிடுவோம்” என்றார்.

முன்னதாக, “திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ்காரர் என கூறியுள்ளார். நான் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் சட்டரீதியாக போராடி பெற்றுள்ளோம். அருந்ததியின மக்கள் மட்டுமின்றி, அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதைத்தான் பாஜக வலியுறுத்தி வருகிறது. கடந்த கால தேர்தல்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட, ஒரு இடத்தையாவது அருந்ததியினருக்கோ அல்லது தேவேந்திரருக்கோ திருமாவளவன் கொடுத்திருப்பாரா? அந்தந்த மாநிலங்கள், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடை வழங்கிக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்கி நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருமாவளவன் மறுஆய்வு மனுவை கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், திருமாவளவன் எதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாரா?” என்று எல்.முருகன் கூறினார்.தமிழக ஆளுநர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவது யூகங்கள்தான். தமிழக ஆளுநர் சிறப்பாக செயல்படுகிறார்” என்று அவர் கூறினார்.

சீமான், திருமாவளவன் மீது பாஜக சாடல் - “இந்தியாவில் பிறந்து எந்த மாநிலத்தில் எந்த மொழியை தாய்மொழியாக கொண்டாலும் சாதி, இன, மத வேறுபாடு இன்றி அனைவருமே இந்தியன்தான் என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். தொல்.திருமாவளவனுக்கும் சொல்லித் தர வேண்டும். யார் தமிழன், யார் இந்தியன் என்கிற புரிதல் தமிழகத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு மட்டும் சரியாக விளங்காதது தமிழகத்தின் சாபக்கேடாக உள்ளது” என்று தமிழக பாஜக கருத்து தெரிவித்துள்ளது. மேலும், “கட்சி ஆரம்பிக்கும் ஒவ்வொரு தலைவரும் முதல்வர் கனவு காண்பதில் தவறில்லை. கனவு கண்டவர் எல்லாம் முதல்வர் ஆனதும் இல்லை” என்று அக்கட்சி கூறியுள்ளது. “தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள திராவிடத்தை நீக்க வேண்டும் என சிலர் கிளம்பியுள்ளனர். திமுகவின் கடைசி தொண்டன் உள்ளவரை, தமிழனையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழ்நாடு ஏற்காது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை: “அக்டோபர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களில், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சென்னையில் இருந்து 11,176 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளிக்கு, பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக, மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

379 இணைகளுக்கு திருமணம் நடத்திவைத்த தமிழக அரசு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை மட்டும் மொத்தம் 379 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இணைகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்பட தலா ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் சலுகை: அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி சவுக்கு சங்கர் கையெழுத்திட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. 48 மணி நேரத்தில் இது புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக் கடலில் உருவாகவுள்ள முதல் புயல் இதுதான். காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறினால், அதற்கு கத்தார் நாட்டின் பரிந்துரைப்படி ‘டானா’ என பெயரிடப்படும். இதனிடையே, தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ரோந்து: இந்தியா - சீனா உடன்பாடு - மிகப் பெரிய திருப்புமுனை நிகழ்வாக கிழக்கு லடாக்கில் உள்ள உண்மை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு இந்தியா - சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் நடக்கும் 16-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதற்கு ஒரு நாளைக்கு முன்பாக எல்லைக் கட்டுப்பட்டு கோடு அருகே ரோந்து குறித்த இந்த அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர் சுட்டுக் கொலை: ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் ஒருவர், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர் என மொத்தம் 7 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கந்தர்பால் மாவட்டத்தில் சோனம்மார்க் எனுமிடத்தில் ஞாயிறு மாலை இத்தாக்குதல் நடந்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘தி ரெசிஸ்டன்ஸ் போர்ஸ்’ எனப்படும் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்களைக் கொலை செய்து அங்கு அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் இன்னும் முயற்சிக்கிறது என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம், வெள்ளி விலை திங்கள்கிழமை புதிய உச்சம் கண்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300-க்கும், பவுனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு பவுன் ரூ,58,400-க்கும் விற்பனையானது. அதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.109-க்கு என்று விற்பனையானது. கடந்த 6 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,640 உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு முடிவதற்குள் ஆபரணத் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.60,000 ஆக உயரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

“விஜய் கட்சி மாநாட்டுக்குச் செல்வேன்” - விஷால்: “இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகளை விட, விஜய் என்ன நல்லது செய்யப் போகிறார் என்று தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மக்களோடு மக்களாக சென்று பார்ப்பேன். மாநாட்டுக்கு அழைப்பு தேவையில்லை. நானும் அரசியல்வாதி தான்” என நடிகர் விஷால் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE