சிவகங்கையில் தனியார் காப்பக விவகாரம்: 9 பேரை வேறு காப்பகங்களுக்கு இடமாற்றிய அதிகாரிகள்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: சிவகங்கையில் தனியார் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் மனநலம் பாதித்த பெண்ணை தாக்கி துன்புறுத்தியதாக புகார் எழுந்த நிலையில் அங்கிருந்து 9 பேரை வேறு காப்பகங்களுக்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்தனர்.

சிவகங்கையில் பனங்காடி சாலையில் தனியார் மாற்றுத் திறனாளிகள் இல்லம் இயங்கி வருகிறது. இதை தமிழ்நாடு மாற்றுத் திறனாளி நலவாரிய உறுப்பினர் புஷ்பராஜ் நடத்தி வருகிறார். இந்த இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர், கை, கால் ஊனமுற்றோர் என 31 பேர் தங்கியுள்ளனர். இந்நிலையில் மனநலம் பாதித்த பெண் ஒருவரை அங்குள்ள பெண் பயிற்றுநர் ஒருவர் கம்பால் தாக்கி துன்புறுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் தனியார் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் இன்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்த மனநலம் பாதித்தோர் உட்பட 9 பேரை உடனடியாக வேறு காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்தனர்.

இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், "மனநலம் பாதித்தோர், பார்வையற்றோர் உட்பட 9 பேரை முதற்கட்டமாக வேறு காப்பங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளோம். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைபடி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இது குறித்து தனியார் மாற்றுத்திறனாளிகள் இல்ல பொறுப்பாளர் புஷ்பராஜ் கூறுகையில், "தான் அணிந்திருக்கும் ஆடையிலேயே இயற்கை உபாதை இருந்துள்ளார். இதனால் அவரை பயிற்சியாளர் கண்டித்தார். இந்த தகவலை அறிந்து பயிற்சியாளரை ஏற்கெனவே எச்சரித்துவிட்டேன். காழ்புணர்ச்சி காரணமாக சிலர் அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்" என்று புஷ்பராஜ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE