அக்.24-ல் பயன்பாட்டுக்கு வருகிறது வேலம்பட்டி சுங்கச்சாவடி - தொடர் போராட்டம் அறிவிப்பு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் சாலையில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராத வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற கடந்த பல ஆண்டுகளாக அகற்ற விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் வரும் 24-ம் தேதி சுங்கச்சாவடி திறப்பதற்கான பணிகளை, மத்திய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டிருப்பதால், நாளை மறுதினம் (அக். 23) முதல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான சுங்கச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கூறும்போது, "திருப்பூர் மாவட்ட மக்களுக்கு பெரும் பேராபத்தாகவும், மக்களை தலைமுறைகளை கடந்து சுரண்டுவதற்காக கொண்டுவரப்பட்டது தான், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான சுங்கச்சாவடி திட்டம் ஆகும்.

அவிநாசி நகராட்சியில் தொடங்கி திருமுருகன்பூண்டி நகராட்சியை கடந்து, திருப்பூர் மாநகராட்சியை கடந்து அவிநாசிபாளையம் வரை செல்லும் இந்த சாலை, மாநில நெடுஞ்சாலையாக இருந்ததை, தேசிய நெடுஞ்சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துகிறோம் என்ற பெயரில், ஒரு சதுர அடி கூட நிலம் எடுக்கவில்லை.

மொத்தமுள்ள 32 கிலோ மீட்டரில், 3 கிலோ மீட்டர் இருவழிச் சாலையாக மட்டுமே உள்ள சாலையை, 60 இடங்களில் சாலையை கடக்கும் வசதியும், 21 போக்குவரத்து சிக்னல்களையும் கொண்டுள்ளது. சுங்கச் சாலையாக அறிவிக்கப்பட்டு, இணைப்பு சாலை இன்றி, சாலை ஓரமாக நடைபாதை இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக நீர் நிலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதை அகற்றக்கோரியும், சுங்க சாலை திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் கடந்த 2 ஆண்டுகளாக வசூல் செய்வதற்கு தொடங்கும் பணிகளை அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் இணைந்து போராடி, தொடர்ந்து தடுத்து வருகிறோம்.

இந்நிலையில் மத்திய அரசின் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, தொடர்ச்சியாக விரைவில் சுங்கச்சாவடிகள் இல்லாத சுங்க வசூல் முறை தொடங்கப்படும் என அறிவித்து வருகிறார். அந்தத் திட்டம் அமலுக்கு வரும்போது பாஸ்ட்டேக் உடன், ஜிபிஎஸ் இணைக்கப் பட்டு சுங்கச் சாலையில் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோமோ, அவ்வளவு தூரத்துக்கான கட்டணம் நமது வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்படும்.

சுங்கச்சாவடியை கடந்தால் மட்டுமே கட்டணம் என்கிற நிலைமை மாறி, சுங்கச் சாலையில் எங்கு பயணித்தாலும், எந்த திசையை நோக்கி பயணித்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணத்துக்கு அவிநாசியில் இருந்து ரயில் நிலையம் வந்தாலும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் நோக்கி சென்றாலும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்றாலும், கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த சாலையை பயன்படுத்தாமல் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள், பொதுநல அமைப்புகள், வணிகர்கள், விவசாயிகள் அனைவருமே வாழ இயலாத சூழ்நிலை ஏற்படும். தினசரி ஒரு தொகையை சுங்கக்கட்டணம் என்ற பெயரில், நம்மை செலுத்த வைத்து சுரண்டுவதற்காக கொண்டு வந்துள்ள திட்டம். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வரும் 24-ம் தேதி முதல் வேலம்பட்டி சுங்கச்சாவடியில் சுங்க வசூல் செய்வதற்கான அறிவிப்பை நாளிதழில் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டம் நாளை மறுதினம் (அக். 23) முதல் நடைபெறுகிறது. இதில், திருப்பூர் மாநகரத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள், அனைத்து பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள் விவசாய சங்கங்கள் தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சமுதாய அமைப்புகள் என பல்வேறு அமைப்பினரும் பெருந்திரளாக பங்கேற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்" என்று கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

திருப்பூர் சமூக ஆர்வலர் கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியருக்கு இன்று (அக்.21) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: "வடக்கு அவிநாசிபாளையம் கிராமம் வேலம்பட்டியில் நீர்நிலை குட்டையை ஆக்கிரமித்து கட்டியுள்ள சுங்கச்சாவடியை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜூன் 26ம் தேதி திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் இன்று வரை நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். ஆகவே நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE