கரூர்: அதிமுக கூட்டணி வலுவானதாக அமையவில்லை. கட்சித் தலைவர்கள் விரைவில் நல்ல கூட்டணியை அமைப்பார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தாந்தோணி கிழக்கு,மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் செல்லாண்டிப்பட்டியில் நேற்று நடைபெற்றது. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ம.சின்னசாமி, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில், அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சத்துணவு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினார். அவருக்கு பிறகு ஜெயலலிதா பல்வேறு மாற்றங்களை உருவாக்கினார். 2016 பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்தார்.
1991-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் திமுக 2 இடங்களில் மட்டுமேவெற்றி பெற்றது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 75 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. மாற்றங்கள் உருவாகும். நாம் அதற்கான பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும். விரைவில் அதிமுக ஆட்சி மலரும். அதற்கான காலமாற்றம் உருவாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
» நெருங்கும் தீபாவளி பண்டிகை: சிவகாசியில் பட்டாசு வாங்க குவியும் வெளிமாவட்ட மக்கள்
» வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அல்ல: தவெக நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் கடிதம்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, “கரூரில் அதிமுக மனித சங்கிலி போராட்டம் நடத்தக்கூட அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று மனிதசங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. அதிமுகவினரை மிரட்டி திமுகவில் சேர்த்து வருகின்றனர்.
தற்போது அதிமுக கூட்டணி வலுவானதாக அமையவில்லை.திமுக கூட்டணி விரைவில் உடையும்அதிமுக தலைமையில் நல்ல கூட்டணியை கட்சித் தலைவர்கள் அமைப்பார்கள். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, அதிமுக ஆட்சி அமைக்கும்” என்றார்