சர்வதேச இறகுப்பந்து போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்பை தமிழகத்தில் உருவாக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

By KU BUREAU

மேலகோட்டையூர்: வண்டலூர் அடுத்த மேலகோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில், இந்திய இறகுப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய சப்-ஜூனியர் இறகுப்பந்து போட்டி நடைபெறுகிறது.

தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியை, தமிழ்நாடு இறகுப்பந்து கழகத்தலைவரும், பாமக தலைவருமான அன்புமணி நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

கிரிக்கெட்டைவிட இறகுப்பந்தாட்டம் வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, தமிழக வீரர்களைசர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தரம் உயர்த்த, மாவட்டந்தோறும் உள்விளையாட்டு அரங்கை அமைக்க வேண்டும். அதேபோல, தமிழகத்தில் சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்பை அரசு உருவாக்கித் தர வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒன்றிய அளவிலும் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி வழங்க வேண்டும்.

ஊரகப் பகுதியில் உள்ள திறமையான வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான உபகரணங்களை இறகுப்பந்துக் கழகம் வழங்கி, தக்க பயிற்சி அளித்துவருகிறது. அரசுப் பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த முழுமையாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE