தீபாவளியை முன்னிட்டு சுயஉதவி குழுக்களின் பரிசு பெட்டகம் விற்பனை: ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்

By KU BUREAU

சென்னை: சென்னையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் இனிப்பு, கார வகைகள், அலங்கார பரிசு பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் சுயஉதவி குழுக்கள் பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றன. இப்பொருட்கள் விழாக் காலத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு, கார வகை தின்பண்டங்கள் அடங்கிய ‘மதி தீபாவளி பரிசு பெட்டகம்’ தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

சிவப்பு அரிசி, கம்பு, சோளம், ராகி, தினை, கருப்பு கவுனி, கருப்பு உளுந்து, நரிப்பயிர், சாமை, ஆவாரம்பூ ஆகியவற்றால் செய்யப்பட்ட லட்டு வகைகள், சாமை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, அரிசி முறுக்கு, கை முறுக்கு ஆகிய கார வகைகள் இடம்பெற்றுள்ளன. தவிர, தஞ்சாவூர் தலையாட்டிபொம்மை, தஞ்சாவூர் ஓவியம், மண் விளக்கு, கோரைப் புல்லில் செய்யப்பட்ட அலங்கார பரிசு பொருட்கள் ஆகியவையும் விற்கப்படுகின்றன.

இவற்றை மொத்தமாகவோ, சிறிய அளவிலோ வாங்க விரும்பும் பொதுமக்கள், www.tncdw.org என்ற இணையதளம், 76038 99270 என்ற செல்போன் எண் வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மொத்த விற்பனைக்கு சலுகைகள் உண்டு. அக்டோபர் 23-ம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களுக்கு சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் உள்ள மதி அனுபவ அங்காடியை அணுகலாம் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE