கோவை: மூத்த குடிமக்கள், தொழிலாளர்கள், ஏழை மக்கள் ஆகியோரிடம் சேவை கட்டணம் வசூலிப்பதை வங்கி நிர்வாகங்கள் தவிர்க்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார். கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில், தொழிற்சங்க பயிலரங்கு சிந்தாமணி கூட்டுறவு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமை வகித்து பேசியதாவது: தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளாக மாற்ற வேண்டுமே தவிர பொதுத்துறை வங்கிகளை தனியார்துறை வங்கிகளாக மாற்ற கூடாது. நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வங்கிகளில் ஒப்பந்த முறையில் தற்காலிகமாக வேலைவாய்ப்பு வழங்கும் முறையை கைவிட வேண்டும். வேளாண் குறு,சிறு தொழில்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி வங்கிகள் அதிக முக்கியத்துவம் அளித்து அதிக கடனுதவி வழங்க வேண்டும்.
வாடிக்கையாளர் சேவை கட்டணங்களை குறைக்க வேண்டும். குறிப்பாக மூத்த குடிமக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு சேவை கட்டணங்கள் வசூலிப்பதை வங்கி நிர்வாகங்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
» ராஜபாளையம் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து: புதுமாப்பிள்ளை உட்பட இருவர் உயிரிழப்பு
தொடர்ந்து வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது குறித்து பங்கேற்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பயிலரங்கில் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சையது இப்ராஹிம் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.