பச்சை நிறத்துக்கு மாறிய கடல்: கரை ஒதுங்கிய உயிரினங்கள் @ புதுச்சேரி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி கடல் ஞாயிற்றுக்கிழமை திடீரென்று பச்சை நிறத்துக்கு மாறியது. பல உயிரினங்கள் கரை ஒதுங்கின, கடலில் குளித்தோர் அரிப்பால் அவதி அடைந்தனர். இதை அடுத்து போலீஸார் கடலில் யாரும் இறங்க வேண்டாம் என எச்சரித்தனர்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், புதுவையில் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து நிலைமை சீரானது. இந்நிலையில் புதுச்சேரி கடற்கரையில் நேற்று இரவு கடல் அலை திடீரென நீல நிறத்தில் ஒளிர்ந்தது. கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் இதனை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இன்று காலை முதல் கடல் அலை வழக்கமான நிறத்தில் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடலின் அலை பச்சை நிறத்தில் மாறத் தொடங்கியது. அப்போது துர்நாற்றம் வீசியது. புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சிலர் கடலில் குளித்து கொண்டு இருந்தனர். கடல் நீர் மாறத் தொடங்கிய சிறிது நேரத்தில் குளித்துக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு லேசான அரிப்பு எடுத்தது. உடனே அவர்கள் கரைக்கு திரும்பினர். இதனை அறிந்த போலீஸார் அங்கு வந்தனர். பொதுமக்கள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என எச்சரித்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் கடல்வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசியர்கள் கடற்கரைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கடல் நீரை சேகரித்து சென்றுள்ளனர். இதே போல் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் கடல் நீரை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். கடற்கரையில் ஜெல்லி பிஷ் போன்று கடல் உயிரினங்கள் சில கரை ஒதுங்கின. திடீரென்று கடலில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE