வண்டலூரில் மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் சாய்பாபா நினைவேந்தல் நிகழ்ச்சி

By KU BUREAU

வண்டலூர்: நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் சாய்பாபா நினைவேந்தல் நிகழ்ச்சி சிபிஎம்எல் சார்பில் வண்டலூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நாட்டின் தலைசிறந்த இடதுசாரி சிந்தனையாளரும், மகத்தான மனித உரிமைப் போராளியும், டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆங்கிலப் பேராசிரியருமான சாய்பாபா மறைவிற்கு சிபிஎம்எல் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி வண்டலூரில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சொ.இரணியப்பன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பேராசிரியர் சாய்பாபாவின் செயல்பாடுகள், நினைவுகளைப் பற்றி பேசியதாவது: சாய் பாபா ஒரு மனித உரிமை போராளி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளர், கவிஞர். இந்த நாட்டில் உழைக்கும் வர்க்கம் குறிப்பாக ஒடுக்கப்பட்ட பழங்குடி, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் தங்களின் வலிமையான குரல் ஒன்றை இழந்திருக்கிறது. அனைவரின் சார்பில் பேராசிரியர் சாய் பாபாவுக்கு வீர வணக்கமும், புகழஞ்சலியும் செலுத்துகிறோம். பேராசிரியர் சாய்பாபாவின் செயல்பாடுகளும், சிந்தனைகளும் புரட்சியாளர்கள் ஜனநாயக சக்திகள் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அதியமான், தாம்பரம் மாநகர செயலாளர் ஆபிரகாம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் பாலாஜி, கூடுவாஞ்சேரி நகர செயலாளர் தினேஷ் குமார், மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி நிர்வாகி வேதியான், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க நிர்வாகி அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE