புரட்டாசி முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை: மாயனூரில் மீன் வாங்க குவிந்த மக்கள்

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: புரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான (அக். 20) கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணை பகுதியில் மீன் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் குவிந்தனர்.

கரூர் மாவட்டம் காவிரி கதவணை பகுதியில் ஆற்று மீன்கள் உயிருடன் பிடித்து விற்பனை செய்யப்படுவதால் மீன்கள் வாங்குவதற்காக ஞாயிற்றுக் கிழமைகளில் மாயனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி கரூரில் இருந்தும், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஏராளமானோர் வருகின்றனர்.

புரட்டாசி மாதம் பலர் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள் என்பதால் மாயனூரில் மீன் வாங்க வருபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இந்நிலையில் புரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (அக். 20) மாயனூரில் மீன் வாங்க ஏராளமானோர் காலை முதலே குவிந்தனர்.

மக்கள் வருகை காரணமாக மீன்கள் விலைகள் கணிசமாக அதிகரித்தன. ரூ.400-க்கு விற்பனையான விரால் மீன் ரூ.650-க்கும், இறால், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்கள் முன்பு விற்பனையானதை விட 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிக விலைக்கு விற்பனையானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE