பணியிட மாறுதல் செய்வதை கைவிட வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெ.சுதர்சன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குணசேகரன், பொருளாளர் பவுல்ராஜ் மாவட்டத் துணைத் தலைவர் மு.ராமு உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் விரைந்து நிரப்ப வேண்டும், கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெறும் ஆய்வு கூட்டங்களை 6 மணிக்குள் முடிக்க வேண்டும் விடுமுறை தினம் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்தக் கூடாது, விடுமுறை தினங்களில் ஊராட்சிகளில் கள ஆய்வு செய்வதை கைவிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவுகளை தர வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல ஆண்டுகளாக உதவியாளர் நிலையில் பணியாற்றும் ஊழியர்களை வட்டாரங்களில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலையீடு காரணமாக ஊராட்சி செயலர்களை பணியிட மாறுதல் செய்வதை கைவிட வேண்டும். ஊரக வளர்ச்சி அலகில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு பணி அழுத்தம் கொடுக்காமல் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரகம் உள்பட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் பணியாற்றும் கணினி உதவியாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும்.

ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலதாமதமாக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் வங்கி கடன் செலுத்துதல் மற்றும் வீட்டு வாடகை அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது ஊழியர்களின் நலன் கருதி பிரதி மாதம் 1ம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் 17 பி குற்றச்சாட்டுக்கள் பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோப்புகள் மீது ஊழியர்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டன.

கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அனைத்து நிலை ஊழியர்களையும் ஒன்று திரட்டி செப்டம்பர் 6ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE