சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்க தொகை: தமிழக அரசு உத்தரவு

By KU BUREAU

சென்னை: சர்க்கரை ஆலைகளுக்கு 2023-2024 அரவைப் பருவத்துக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.247 கோடிவழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட தமிழக அரசு, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கிறது. அதன்ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது. இதனால், கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன் சர்க்கரை ஆலைகளின் செயல்திறனும் அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு 2023-24-ம்அரவைப் பருவத்துக்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாயவிலையான ரூ.2919.75-ஐக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கிடும் வகையில், ரூ.247 கோடி நிதியை மாநில நிதியிலிருந்து அரசு வழங்கி ஆணையிட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டில் இயங்கிவரும் 2 பொதுத்துறை,12 கூட்டுறவு மற்றும் 16 தனியார்சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215-ஐயும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3,134.75 விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2023-24 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் ஆய்வு செய்து,சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் தலைமையிலான மாவட்டஅளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்கப்படும்.

கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.247 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE