சென்னை: கெட்டுப்போகும் நிலையில் இருந்த ஆவின் டிலைட் பால் பாக்கெட்களை மொத்த விநியோகஸ்தர்கள் மூலமாக, விநியோகம் செய்த ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பால் முகவர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அதன் தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் கனமழையின் போது, பால் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், வேலூர் மற்றும் பாடலூர் ஆகிய பால் பண்ணைகளில் இருந்து கடந்த 17-ம் தேதி பிற்பகலில் பிளாஸ்டிக் மூட்டைகள் மூலம் சுமார் 30 ஆயிரம் லிட்டர் ஆவின் டிலைட் பால் பாக் கெட்கள் நிவாரணப் பணிகளுக்கும், ஆவின் பாலகங்களுக்கும் அனுப்பப்பட்டன.
இதுபோல, மீதமான 5,500 லிட்டர் ஆவின் டிலைட் பால் பாக்கெட்கள் அம்பத்தூர் பால் பண்ணையில் இறக்கி, குளிர்சாதன அறையில் முறையாக பராமரிக்காமல் திறந்தவெளியிலேயே போட்டனர். இதனால், அந்த பால் பாக்கெட்கள் கெட்டுப் போகும் நிலையில் இருந்தன. இதை மொத்த விநியோகஸ்தர்கள் கொள்முதல் செய்ய, ஆவின் அதிகாரிகள் மிரட்டி, நிர்பந்தம் செய்தனர்.
தொடர்ந்து, கொள்முதல் செய்த மொத்த விநியோகஸ்தர்கள் ஒவ்வொருவரும் இந்த தகவலை மறைத்து 18-ம் தேதி அதிகாலையில் அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், நெற்குன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, வில்லிவாக்கம், பாடி, கொரட்டூர், மதுரவாயல், வானகரம் உள்ளிட்ட மத்திய சென்னைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.
» தீபாவளிக்கு முன்னதாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்: முதல்வருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கடிதம்
இந்த விபரம் தெரியாத பால் முகவர்கள் ஒவ்வொருவரும் 18-ம் தேதி காலையில் அந்த ஆவின் டிலைட் பால் பாக்கெட்களை பொதுமக்களுக்கும், சில்லறை கடைகளுக்கும் வழக்கம்போல் விநியோகம் செய்துள்ளனர். அந்தபால் பாக்கெட்கள் காலையிலேயே கெட்டுப் போகத் தொடங்கியதால் பொதுமக்களும், சில்லறைகடைக்காரர்களும் அவற்றை பால்முகவர்களிடம் திருப்பி ஒப்படைத்துவிட்டு, அதற்குரிய தொகையை பெற்றுக்கொண்டனர்.
ஆனால், கெட்டுப்போன டிலைட் பால் பாக்கெட்களை மொத்த விநியோகஸ்தர்கள் திரும்பப் பெற மறுத்துள்ளனர். மேலும், கெட்டுப்போன பாலுக்குரிய தொகையையும் திருப்பி தரவில்லை. இதனால், பால் முகவர்கள் கடும் நிதியிழப்பை சந்தித்துள்ளனர்.
எனவே, ஆவின் டிலைட்பால் பாக்கெட்களை முறையாக பராமரிக்காமல் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் செயல்பட்ட அம்பத்தூர் பால் பண்ணை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கெட்டுப்போகும் நிலையில் ஆவின் டிலைட் பால் பாக்கெட்களை கொள்முதல் செய்ய நிர்பந்தம் செய்த ஆவின் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.