போதை பொருளை ஒழிக்க ஒருங்கிணைந்த செயல்பாடு: தென் மாநிலங்களின் காவல்துறை மாநாட்டில் முதல்வர் அறிவுறுத்தல்

By KU BUREAU

சென்னை: தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை சென்னையில் தொடங்கிவைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போதை பொருட்களை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தென்மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர்கள் சங்கர் ஜிவால் (தமிழகம்), அலோக் மோகன் (கர்நாடகா), சேக் தர்வேஷ் சாகேப்(கேரளா), ஷாலினி சிங் (புதுச்சேரி), துவாரகா திருமல ராவ் (ஆந்திரா) உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்படையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம்செயல்பட்டு வருகிறோம். அந்தவகையில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளான போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச்செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, நம்மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்கு இங்கு நாம் கூடியிருக்கிறோம்.

இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழக காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது. தமிழக அரசும்,தமிழக காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

தமிழக காவல்துறையின் தொடர்முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை நாங்கள் கையாண்டுவருகிறோம். ஒன்று, கைது செய்வதோடு மட்டுமின்றி சொத்து பறிமுதல், வங்கிக்கணக்கு முடக்கம்,கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறைத்தண்டனை பெற்றுத்தருவது உள்ளிட்ட தீவிர சட்டஅமலாக்கம் மூலமாக போதைப்பொருட்களை ஒழிப்பது. இரண்டாவது, போதைப்பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, கல்விநிலையங்கள் அருகில் போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள். இவை மிக நல்ல பலன்களை கொடுத்திருக்கின்றன.

போதைப்பொருள் குற்றவாளிகளின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழக காவல்துறை முன்னோடியாகத் திகழ்ந்துவருகிறது. இதன்மூலம் குற்றவாளிகளின் பொருளாதார பலம் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், போதைப்பொருள் குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் அவர்களது சொத்துகள் பல மாநிலங்களில் பரவிக் கிடக்கின்றன.

போதைப் பொருட்களை ஒழிக்க,ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது. குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும், விசாரணை மேற்கொள்ளவும் உங்கள் மாநிலத்துக்கு வருகை தரும் தமிழக காவல்துறையினருக்கு உங்கள்ஒத்துழைப்பு மிகவும் தேவை. குறிப்பாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழகத்துக்குள் வருவதை தடுக்க, தமிழக காவல்துறையினரும், அண்டை மாநில காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இணையவழிக் குற்றங்களை தடுப்பதிலும் நாம் இணைந்துசெயல்படவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். சில தென்கிழக்கு நாடுகளை அடிப்படையாக வைத்து செயல்படும் குற்றவாளிகளின் பிடியில் சிக்கி, நம்முடைய இளைஞர்கள் பலர் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்பத்துக்கு ஆளாகிஇருக்கிறார்கள். இதுபோன்று வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை போக்குவதற்கு நமக்குள்ளே இருக்கின்ற ஒருங்கிணைப்பை பலப்படுத்த வேண்டும்.

இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்சினையாக உள்ளன. அத்தகைய வதந்திகள் பற்றியும் நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

போதைப்பொருட்களாக இருந்தாலும், குற்றங்களாக இருந்தாலும், இணையவழி குற்றங்களாக இருந்தாலும், அதைத் தடுக்க நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம், நம்முடைய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை காப்பதோடு, அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தையும், நம் மாநிலங்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யலாம். இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE