சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் இடைநீக்க விவகாரம்: கடவுளைவிட தாங்கள் மேலானவர்கள் என நினைக்க கூடாது - உயர் நீதிமன்றம்

By KU BUREAU

சென்னை: ‘சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள், கடவுளைவிட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியர் ஒருவரை தாக்கியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாகவும் கூறி, நடராஜ தீட்சிதர் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதர்கள் குழு நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து நடராஜ தீட்சிதர்,அறநிலையத்துறை இணை ஆணையரிடம் முறையீடு செய்தார்.அதை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இணை ஆணையரின் உத்தரவை எதிர்த்து, பொது தீட்சிதர்கள்குழு செயலாளரான வெங்கடேச தீட்சிதர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘பொது தீட்சிதர் குழு எடுத்தமுடிவில் தலையிட அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே நடராஜ தீட்சிதரின் இடைநீக்கத்தை ரத்து செய்த இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர்தரப்பில், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சிதம்பரம் கோயில் தங்களுக்குச் சொந்தமானது என்பதுபோன்ற நினைப்பில் பொது தீட்சிதர்கள் வரம்பு மீறி செயல்படுகின்றனர். நீதிமன்றம்தான் இதைகட்டுப்படுத்த வேண்டும்’’ என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி,‘‘தீட்சிதர்களால் எனக்கும் பிரச்சினை ஏற்பட்டது. மனக்கஷ்டங்களைப் போக்குவதற்காக கோயிலுக்கு வரும் பக்தர்களை கோயிலில் அவமானப்படுத்துவது வேதனை தருகிறது. மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். இது நல்ல அறிகுறிகிடையாது. கோயிலுக்கு வருபவர்கள் எல்லோரும் தங்களுடன் சண்டைக்கு வருவதுபோல தீட்சிதர்கள் நினைக்கின்றனர். சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள், கடவுளைவிட தாங்கள்மேலானவர்கள் என நினைக்கக்கூடாது’’ என கண்டித்தார்.

தொடர்ந்து, ‘‘சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டுமே நடத்தப்படும் ஆருத்ரா தரிசனம் தற்போது பல கோயில்களில் நடத்தப்படுகிறது. தீட்சிதர்களின் செய்கையால் சிதம்பரம் கோயில் ஆருத்ரா தரிசனத்துக்கு முன்புபோல பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. இதேநிலை நீடித்தால் பக்தர்கள் வருகை குறைந்து பழமையான கோயில் பாழாகி விடும். கோயிலில் காசுபோட்டால் மட்டுமே பூ கிடைக்கிறது. இல்லையென்றால் விபூதிகூட கிடைக்காது’’ என்றார்.

பின்னர் இந்த வழக்கில் அறநிலையத் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு (அக்.21) தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE